ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The political issues in the campaign for a recount in the US elections

அமெரிக்க தேர்தல்களின் மறுவாக்கு எண்ணிக்கை பிரச்சாரத்தின் அரசியல் பிரச்சினைகள்

Joseph Kishore and David North
29 November 2016

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு மூன்று வாரங்களுக்குப் பின்னர், கிளிண்டனை விட ட்ரம்பின் வெற்றியை உறுதிப்படுத்த உதவிய மூன்று மாநிலங்களான விஸ்கான்சின், மிச்சிகன் மற்றும் பென்சில்வேனியாவில் மறுவாக்கு எண்ணிக்கைக்கான முன்முயற்சிகளால் தூண்டிவிடப்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, தீவிரமடைந்து வருகிறது. இந்த முன்முயற்சியானது, மக்கள் வாக்குகளில் இப்போது 2.2 மில்லியனுக்கும் அதிகமாக முன்னிலையில் உள்ள ஹிலாரி கிளிண்டனின் வாக்கு அதிகரிப்புடன் பொருந்துகிறது. இதை விட, இது, வரலாற்றுரீதியில் ஜனாதிபதி தேர்வு சபையில் வெற்றி பெறாத ஒரு வேட்பாளரது முன்னொருபோதும் இல்லாத வாக்கு வித்தியாசமாக உள்ளது.

மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியரும் இணையவழி பாதுகாப்பு வல்லுனருமான ஜெ. அலெக்ஸ் ஹால்டர்மன் முன்வைத்த ஓர் ஊடக அறிக்கையைத் தொடர்ந்து, கடந்த வாரம் பசுமைக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜில் ஸ்டைன் மறுவாக்கு எண்ணிக்கை நடவடிக்கைக்கான முன்முயற்சியைத் தொடங்கினார். கிளிண்டன் பிரச்சாரக்குழுவும் மற்றும் ஜனநாயகக் கட்சியும் தேர்தல் முடிவுகளை எதிர்க்க விரும்பாத நிலையில், மறுவாக்குப்பதிவு முயற்சியை அவற்றின் பார்வையில் சட்டப்பூர்வமாக்குவதற்காக ஹால்டர்மன் வலதுசாரி வாதங்களைப் பயன்படுத்தி வாதிடுகையில், இந்த மூன்று மாநிலங்களின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ரஷ்யாவினால் ஊடுருவப்பட்டிருக்கலாம் என்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரத்தை அவர் தலைமையிலான ஒரு குழு கண்டறிந்திருப்பதாக கூறுகிறார். இக்கருத்தை அவர், விஸ்கான்சினில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான ஸ்டைனின் மனுவை ஆதரிக்கும் ஒரு பிரமாண பத்திரத்திலும் மீளவலியுறுத்தி இருந்தார்.

சனியன்று கிளிண்டன் பிரச்சாரக்குழு அறிவிக்கையில், ஸ்டைன் தொடங்கிய நடைமுறையில் அதுவும் பங்கெடுக்க இருப்பதாக அறிவித்தது. ட்ரம்ப் இந்த மறுவாக்கு எண்ணிக்கையை ஞாயிறன்று கண்டித்ததோடு மட்டுமல்லாது, கிளிண்டனுக்கான "மில்லியன் கணக்கான" சட்டவிரோத வாக்குகளைக் கழித்து பார்த்தால் அவர் மக்கள் வாக்குகளிலும் வென்றிருக்கலாம் என்று, எந்தவித போதிய உண்மையும் இல்லாமல், குற்றஞ்சாட்டவும் செய்தார்.

மாநிலங்களில் குறிப்பாக மிகவும் நெருக்கமான வாக்கு எண்ணிக்கை பிரச்சினையில் இருக்கும் நிலைமையில், (விஸ்கான்சினில் ட்ரம்பின் வாக்கு வித்தியாசம் 22,000, மிச்சிகனில் 10,000, பென்சில்வேனியாவில் 68,000 என்றிருக்கையில்) மறுவாக்கு எண்ணிக்கையைக் கோருவதென்பது ஒரு சட்டப்பூர்வ விடையிறுப்பு தான்.

ஆனால் இது ஒரு தொழில்நுட்ப நடைமுறை என்பதையும் விட, இந்த மூன்று மாநிலங்களிலும் இன்னும் அதிகமானது சம்பந்தப்பட்டுள்ளது. ஒரு சுமூக ட்ரம்ப் நிர்வாக மாற்றத்திற்காக நடக்கும் சிக்கலான முயற்சிகள், மக்களிடையே தீவிரமடைந்துள்ள அதிருப்தி மனோபாவம் மற்றும் தேர்தல் நாளில் இருந்து கட்டமைந்துள்ள நெருக்கடி ஆகியவற்றால் ஆளும் உயரடுக்கிற்குள் நிலவும் அரசியல் பிளவுகளை இந்த மறுவாக்கு எண்ணிக்கைக்கான முன்முயற்சி அம்பலப்படுத்துகிறது.

மறுவாக்கு எண்ணிக்கை குறித்த ஒபாமா நிர்வாகத்தின் விடையிறுப்பே கூட, பெரிதும் அடிப்படை ஜனநாயக கோட்பாடுகளைக் குறித்த அதன் அலட்சியத்தையே காட்டுகிறது. ஞாயிறன்று நியூ யோர்க் டைம்ஸ் இல் வெளியான ஒரு கருத்துரையில் ஒரு மூத்த வெள்ளை மாளிகை அதிகாரி, “அமெரிக்க மக்களின் விருப்பத்தைத் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில்" தேர்தல் முடிவுகளை உறுதிப்படுத்தி வைக்கும் "வாக்குப்பதிவு முறையின் முழு நேர்மையை" வலியுறுத்தினார்.

இது உண்மையில்லை என்பது மிகவும் வெளிப்படையானது. ட்ரம்பின் தேர்வு "மக்களின் விருப்பத்தை" பிரதிபலிக்கவில்லை. அவர் மக்கள் வாக்குகளில் குறிப்பிடத்தக்களவிலான வாக்கு வித்தியாசத்தில் தோற்றுள்ளார். அனைத்திற்கும் மேலாக ட்ரம்ப் தன்னைத்தானே தொழிலாள வர்க்க பாதுகாவலராக காட்டி, வீராவேச பொய்களின் அடிப்படையில் பிரச்சாரம் செய்திருந்தார்.

ட்ரம்ப் ஐ அரவணைப்பதற்காக முண்டியடித்து ஓடும் அவர்களின் ஓட்டத்தில், ஜனநாயகக் கட்சியினர், ஊடகங்களும் தான், மக்கள் வாக்குகளில் ட்ரம்ப் தோல்வியின் முக்கியத்துவத்தை குறைமதிப்பிட்டுக் காட்டுகின்றன மற்றும் மூடிமறைக்கின்றன. ஜனநாயகக் கட்சியானது, அது குடியரசுக் கட்சி மற்றும் ட்ரம்ப் உடன் கொண்டிருக்கும் தந்திரோபாய கருத்து வேறுபாடுகளை விட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்துவரும் எதிர்ப்பைக் குறித்து மிகவும் கவலைக் கொண்டுள்ளது. வர்க்க கொள்கையின் அடிப்படை அம்சங்களின்படி, இரண்டு கட்சிகளும், சிஐஏ இன் தலைமை-முகவர் ஒபாமா வார்த்தைகளில் கூறுவதானால், “ஒரே அணியில் தான்" உள்ளன.

பசுமை கட்சி தேர்தல் நடைமுறையில் உள்ள ஜனநாயகவிரோத தன்மையைக் கண்டிப்பதை விட, ரஷ்ய ஊடுருவல் வாக்கு முடிவுகளைப் பாதித்திருக்கும் என்ற வாதத்துடன் அதன் மறுவாக்கு எண்ணிக்கை முயற்சியை நியாயப்படுத்துகிறது. வாக்காளர்களின் ஜனநாயக நனவை அதிகரிக்க முயல்வதற்கு பதிலாக, பசுமை கட்சியினர் —முதலாளித்துவ அரசியல் கட்சிகளைப் போல அதே விதத்தில்— ஆளும் வர்க்கத்தின் நலன்களை நிலைநிறுத்தும் பிற்போக்குத்தனமான வாதங்களைப் பயன்படுத்துகின்றனர். நடைமுறையளவில் பசுமைக் கட்சியினர் வாதிடுவது என்னவென்றால், அவர்கள் மறுவாக்கு எண்ணிக்கை கோருவது தேர்தலைக் களவாடுவதில் இருந்து ட்ரம்பை தடுப்பதற்காக அல்ல, மாறாக அமெரிக்க அரசியலில் தலையிடுவதிலிருந்து புட்டினை தடுப்பதற்காக என்றாகிறது.

கிளிண்டன் தேர்வாகி இருந்தால் ட்ரம்ப் வெற்றியைப் பின்தொடர்ந்த எல்லா சஞ்சலங்களும் தவிர்க்கப்பட்டிருக்கும் என்ற ஒரு அறிவிக்கப்படாத அனுமானமும் அதில் உள்ளது, இதை மறுத்து ஸ்டைன் ஒன்றும் கூறவில்லை. இது ஒரு அரசியல் ஏமாற்றத்தின் நடைமுறையாகும், அது அமெரிக்க ஜனநாயகத்தின் பரிச்சயமான வடிவங்களில் இருந்து ஏதோவொருவித பயங்கரமான எதிர்பாரா விலகலாக ட்ரம்ப் ஐ பார்க்கிறது.

2016 தேர்தல் முடிவானது, புறநிலை அர்த்தத்தில், ஓர் ஆழ்ந்த அமெரிக்க சமூக நெருக்கடியின் வெளிப்பாடு மற்றும் விளைவு என்பதாக பசுமைக் கட்சிக்கு தோன்றவில்லை. மக்கள் வாக்குகளில் கிளிண்டனை விட ட்ரம்ப் குறைவாக இருந்தாலும் கூட, அவர் 62 மில்லியன் வாக்குகள் பெற்றுள்ளார் என்ற உண்மையானது ஜனநாயகக் கட்சி மற்றும் ஒபாமா நிர்வாகம் பிரதிநிதித்துவம் செய்த ஒவ்வொன்றின் மீதும் வைக்கப்படும் ஒரு கடுமையான கண்டனமாகும். எந்தளவிலான சமூக துயரங்களும் செயற்பிறழ்ச்சிகளும் இருந்திருந்தால், பல தொழிலாளர்கள் உட்பட, பல மில்லியன் கணக்கான மக்களை இந்த பிற்போக்குத்தனமான பாசாங்குக்காரர்களுக்கு அவர்களது வாக்குகளை அளிக்க இட்டுச் சென்றிருக்கும்?

ட்ரம்பின் வளர்ச்சியானது, வரலாற்று அளவிலான சமூக சமத்துவமின்மை மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் அழிக்கப்பட்டதுடன் சேர்ந்து, கடந்த இருபத்தைந்து ஆண்டுகால முடிவில்லா போர் மற்றும் பதினைந்து ஆண்டுகால "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" விளைவாகும். அது எட்டாண்டு கால ஒபாமா நிர்வாகம் மீது வைக்கப்பட்ட ஒரு மதிப்புரையாகவும் இருக்கிறது, அதன் கொள்கைகளை தொடர்வதற்குத்தான் கிளிண்டன் சூளுரைத்தார். ட்ரம்ப் வளர்ச்சிக்கு புறநிலை தூண்டுதலை வழங்கிய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியை சமாளிக்க ஒரு கிளிண்டன் பதவிகாலம் எந்த வழியில் பங்களிப்பு செய்திருக்கும்?

ஜனநாயகக் கட்சிக்கு ஒரு மாற்றீட்டை முன்வைப்பதற்கு பதிலாக பசுமை கட்சியினர், தங்களைத்தாங்களே அதன் மிகவும் ஒத்திசைவான பாதுகாவலர்களாக நிலைநிறுத்தி வருகிறார்கள். தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியை சுற்றி வலம் வந்த அமைப்புகளையும் மற்றும் பசுமைக் கட்சியையும் ஆதரித்த ஒரு பரிவாரத்தால் ஆதரிக்கப்பட்ட ஸ்டைன், சமூக எதிர்ப்பை தணிக்கவும் மற்றும் மூச்சடைக்க செய்யவும் ஆளும் வர்க்கத்தின் ஓர் அரசியல் கருவியாக பசுமை கட்சியின் பாத்திரத்தை மேலுயர்த்த முனைந்துள்ளார்.

முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடி நிலைமைகளின் கீழ், ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளின் ஏதோவொரு கன்னையின் பின்னால் தொழிலாள வர்க்கத்தை அடைக்க முயலும் முயற்சிகளை அனுமதிக்காமல், அது அதன் சொந்த முன்னோக்கை முன்னெடுக்க வேண்டும்.

மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவு என்னவாக இருந்தாலும், 2016 தேர்தல் அமெரிக்காவிற்குள்ளும் மற்றும் அதன் எல்லைகளைக் கடந்தும் அதிர்வுகரமான அரசியல் கொந்தளிப்புகளின் ஒரு புதிய காலக்கட்டத்தை தொடங்கி வைத்துள்ளது. விஸ்கான்சின், மிச்சிகன் மற்றும் பென்சில்வேனியாவின் வாக்குகள் தலைகீழாகும் சாத்தியமற்ற சம்பவம் நடந்தாலும் கூட, அதுபோன்றவொரு முடிவை ட்ரம்ப் மற்றும் அவரது மிகவும் ஈவிரக்கமற்ற ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று யாரால் முழுமையாக நம்ப முடியும்?

அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவ நெருக்கடியில் இருந்து வெளியேறுவதற்கு அங்கே எந்த எளிய வழியும் கிடையாது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முன் இருக்கும் முக்கிய பிரச்சினை, ஆளும் வர்க்கத்தின் மொத்த அரசியல் எந்திரத்துடன் முழுமையாக முறித்துக் கொண்டு, ஒரு சோசலிச, சர்வதேசியவாத மற்றும் புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான விடையிறுப்பை முன்னெடுப்பதாகும். இந்த 2016 தேர்தலில் இருந்து அவசியமான அரசியல் படிப்பினைகளை எடுத்து, சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறு நாம் நமது வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்களை வலியுறுத்துகிறோம்.