ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Vote no on the Italian constitutional referendum!

இத்தாலிய அரசியலமைப்பு மீதான சர்வஜன வாக்கெடுப்பில் வேண்டாமென வாக்களியுங்கள்!

Joint statement of the Socialist Equality Party (Britain), Parti de l'égalité Socialiste (France) and Partei für Soziale Gleichheit (Germany)
3 December 2016

பிரதம மந்திரி மரியோ ரென்சி முன்மொழிந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மீது இத்தாலியில் நாளை நடக்கவுள்ள சர்வஜன வாக்கெடுப்பில் "வேண்டாமென" வாக்கிடுமாறு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) அழைப்புவிடுக்கிறது. இந்த சர்வஜன வாக்கெடுப்பு, சட்டமன்றத்தில் அவரது கட்சியின் நிகழ்ச்சிநிரலை திணிப்பதற்கு சர்வாதிபத்திய ஆட்சியை நோக்கிய ஒரு படியாக நடைமுறையளவில் பிரதம மந்திரிக்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்கக்கூடியதாகும்.

இந்த சர்வஜன வாக்கெடுப்பு ஐயத்திற்கிடமின்றி பிற்போக்குத்தனமானதாகும். செனட் சபை, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிராந்திய அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அமைப்பாக மாற்றப்பட்டு, பல அரசு விவகாரங்களில் வாக்கெடுப்பு முறையை அது இல்லாதொழிக்கிறது —குறிப்பாக, நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் மூலமாக பிரதம மந்திரியை பதவியிலிருந்து கீழிறக்கும் அதன் பலம் பறிக்கப்படும். அந்த சர்வஜன வாக்கெடுப்பில் உள்ள "தேர்தல் சட்ட" (Italicum) நடவடிக்கையானது, பிரதிநிதிகள் சபையில்  பெரும்பான்மை ஆசனங்களை வெல்லும் எந்தவொரு கட்சிக்கும்  தன்னியல்பாக 54 சதவீத மேலதிக பெரும்பான்மையை வழங்கும். பின்னர் அது பிரதம மந்திரியை நியமிக்கவும், பின்னர் அவர் சட்டமன்றத்தில் எந்தவித நடைமுறை எதிர்ப்புமின்றி ஆட்சி செய்ய கூடியதாகவும் இருக்கும்.

இந்த சர்வஜன வாக்கெடுப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தாலும், வங்கிகள் மற்றும் ரென்சியின் ஜனநாயகக் கட்சியாலும் (Partito Democratico - PD) ஆதரிக்கப்படுகிறது. கடந்த வாரம் ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் ஜோன் குளோட் ஜூங்கர் La Stampa க்கு கூறுகையில், “நான் 'ஆம்' வெற்றியை பார்க்க விரும்புவேன்,” ஏனென்றால் ரென்சி "சரியான சீர்திருத்தங்களை" மேற்கொண்டு வருகிறார் என்றார்.

இரண்டாம் உலகப் போர் மற்றும் பெனிட்டோ முசோலினியின் பாசிச ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர், இத்தாலியில் ஏற்பட்டிருந்ததைப் போலவே, தெற்கு ஐரோப்பிய ஆட்சிகளில் "ஆழமாக வேரூன்றியிருந்த அரசியல் பிரச்சினைகளை" ஜேபி மோர்கனின் மூலோபாய அறிக்கை ஒன்றில் வெளிப்படுத்தியபோதே, ரென்சி இந்த சர்வஜன வாக்கெடுப்பை முன்மொழிவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னரே, அவர்களது கணக்கீடுகள் வெளிப்பட்டிருந்தன.

“சுற்றியுள்ள நாடுகளது அரசியல் அமைப்புமுறைகள் சர்வாதிகாரத்திற்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்டு, அந்த அனுபவத்திற்கேற்ப வரையறுக்கப்பட்டன. … சுற்றியுள்ள நாடுகளின் அரசியல் அமைப்புமுறைகள் ஏறத்தாழ பின்வரும் பல அம்சங்களை கொண்டுள்ளன: பலவீனமான நிர்வாக முறைகள்; பிராந்தியங்களுடன் ஒப்பிடுகையில் பலவீனமான மத்திய அரசுகள்; தொழிலாளர் உரிமைகளுக்கு அரசியலமைப்பு ரீதியிலான பாதுகாப்பு; அரசியல் வாடிக்கைமயப்படுத்தலுக்கு (clientelism) உதவியாக ஒத்திசைவைக் கட்டமைக்கும் அணுகுமுறைகள்; மற்றும் நடைமுறை அரசியலில் விரும்பாத மாற்றங்கள் செய்யப்பட்டால் அவற்றை எதிர்ப்பதற்கான உரிமை ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இந்த அரசியல் மரபியத்தின் குறைபாடுகள் இந்நெருக்கடியில் வெளிப்பட்டுள்ளது,” என்றது குறிப்பிட்டது.

ஐரோப்பிய ஆளும் உயரடுக்கின் முழு ஆதரவுடன் இந்த சர்வஜன வாக்கெடுப்பை ரென்சி இப்போது ஏன் முன்மொழிந்துள்ளார் என்பதைக் காண்பது சிரமமல்ல.

ஐரோப்பா பொருளாதார மந்தநிலையில் சிக்கியுள்ளது, இத்தாலிய வங்கிகள் நூற்றுக் கணக்கான பில்லியன் வாராக் கடன்களை முகங்கொடுக்கின்றன. அண்மித்து ஒரு தசாப்த கால சிக்கன நடவடிக்கைகளால் அதன் அரசியல் அமைப்புமுறை மதிப்பிழந்து போயுள்ளது. பெருநிறுவன திவால்நிலைமைகள் மற்றும் சமூக வெட்டுக்களின் ஓர் அலைக்கு தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது, அது தொழிலாளர்களிடையே வெடிப்பார்ந்த சமூக கோபத்தை தூண்டிவிடும். ரென்சியின் சர்வஜன வாக்கெடுப்பானது, வங்கிகள் மற்றும் பிரதான பெருநிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு இணங்க தொழிலாள வர்க்க எதிர்ப்புக்கு எதிராக ஜனநாயகக் கட்சியை (PD) ஈவிரக்கமின்றி செயல்பட அனுமதிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

ரென்சியின் சர்வஜன வாக்கெடுப்புக்கு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் எதிர்ப்பானது, இத்தாலியில் “வேண்டாம்" வாக்குகளுக்கு தேசியவாத அழைப்புகள் விடுத்துள்ள அரசியல் வட்டத்திலுள்ள குழுக்களுக்கான நமது சமரசமற்ற எதிர்ப்பைக் குறைத்துக் கொள்வது என்றாகாது. இதில், சில்வியோ பெர்லுஸ்கோனியின் ஃபோர்ஸா இத்தாலியா (Forza Italia) கட்சியின் எச்சசொச்சங்கள், அதிவலது லீகா நோர்ட் (Lega Nord), மற்றும் பாசிசவாத Fratelli d'Italia அமைப்பு போன்ற இத்தாலிய வலதுகள் உள்ளடங்கி உள்ளன. அவை நீண்டகாலமாகவே ரென்சியின் அரசியலமைப்பு திருத்தங்கள் போன்ற சர்வாதிகார நடவடிக்கைகளை கோரி வந்துள்ளன, ஆனால் அவை PD இன் நாளைய தோல்வியை மீண்டும் அதிகாரத்தை பெறுவதற்கான ஒரு வாய்ப்பாக பார்க்கின்றன.

பெப்பே கிறில்லோ (Beppe Grillo) இன் ஐந்து-நட்சத்திர இயக்கம் (Five-Star Movement – M5S) அதிகரித்தளவில் வெளிநாட்டவர் விரோத மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான ஜனரஞ்சகவாத தாக்குதல்களை வெளியிட்டுள்ளதுடன், ரென்சியை "அடிபட்ட பன்றியாக" சாடியுள்ளது. ஆனால் M5S அதுவே, ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கைகள் மீதான மறுபேரம்பேசல் மற்றும் யூரோ நாணயத்திலிருந்து இத்தாலி வெளியேறுவதன் மீது ஒரு சர்வஜன வாக்கெடுப்பு என இந்த அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒரு தீர்வை பேரம்பேச முன்மொழிகிறது.

ஜனநாயகக் கட்சியின் சுற்றுவட்டத்திலுள்ள நிறைய அமைப்புகள் "வேண்டாம்" வாக்குகளுக்கு அழைப்புவிடுக்கின்றன. இதில், இத்தாலிய தொழிற்சங்க பொது கூட்டமைப்பு (CGIL) மற்றும் இத்தாலிய உலோகத்துறை தொழிலாளர் சங்கம் (FIOM), ஜனநாயகக் கட்சியிலிருந்து உடைந்து வந்த அமைப்புகளை உள்ளடக்கிய இத்தாலிய இடது, மற்றும் Rifondazione Comunista போன்ற குழுக்கள் உள்ளடங்கும். Rifondazione Comunista —இது, 1991 இல் சோவியத் அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தை மீட்டமைத்த பின்னர், ஜனநாயகக் கட்சிக்கு (PD) அப்பால், இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி (PCI) இல் இருந்து உடைந்து வந்து உருவான பிரதான ஏனைய போக்காகும்.

இந்த குழுக்கள் பல தசாப்தங்களாக ஜனநாயகக் கட்சியுடன் நெருக்கமாக இயங்கி உள்ளன, மற்றும் Rifondazione இன் விடயத்தை பொறுத்த வரையில், அது ஓய்வூதிய வெட்டுக்களுக்கு வாக்களிக்கவும் மற்றும் ஆப்கான் போருக்கு நற்சான்று வழங்கவும் 2006-2007 இல் ஜனநாயகக் கட்சியுடனான அரசாங்கத்தில் நுழைந்தது. இவை ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிப்பதுடன், ரென்சி மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் கொள்கைகளை எதிர்க்க விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எந்த முன்னோக்கிய பாதையும் வழங்கவில்லை.

இவை, முசோலினியின் வீழ்ச்சிக்குப் பின்னர், இத்தாலிய முதலாளித்துவம் மற்றும் நேச நாடுகளின் ஏகாதிபத்திய சக்திகளுக்கான இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் (PCI) ஆதரவின் அடித்தளத்தில் அமைந்திருந்த, இரண்டாம் உலக போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட முதலாளித்து அரசு அமைப்புமுறையுடன் தங்களைத்தாங்களே இணைத்துக் கொண்டுள்ளன. ஸ்ராலினிச PCI, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு இயக்கங்களை காட்டிக்கொடுத்து, இரண்டாம் உலக போருக்குப் பின்னர் ஒரு சமூக புரட்சியை தடுத்தது. சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சியை ஆதரித்த, PCI இன் வழிவந்த மற்றும் ஒரு முன்னாள் கிறிஸ்துவ ஜனநாயகவாதியான ரென்சி போன்ற வலதுசாரி காரியாளர்களை நியமித்துள்ள ஒரு கட்சி, இப்போது அக்காலக்கட்டத்தில் வழங்கப்பட்ட சலுகைகளில் என்னவெல்லாம் எஞ்சியிருக்கிறதோ அவற்றை அழிக்க விரும்புகிறது.

ரென்சியின் சர்வஜன வாக்கெடுப்பால் எழுந்துள்ள பிரச்சினைகள் மீது, தொழிலாள வர்க்கத்திற்கான அரசியல்ரீதியில் சுயாதீனமான ஒரு முன்னோக்கை வரையறுப்பதே அதிமுக்கிய பணியாகும்.

இந்த வாக்கெடுப்பின் விளைவு என்னவாக இருந்தாலும், இந்த சர்வஜன வாக்கெடுப்பானது அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்வானதால் தீவிரமடைந்துள்ள சர்வதேச அளவிலான ஆளும் வர்க்கங்களை சூழ்ந்துள்ள அதிர்ச்சியூட்டும் நெருக்கடியை தீவிரப்படுத்தும். “ஆம்" எனும் வாக்கு, தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவதற்கு வழி வகுக்கும். “வேண்டாம்" வாக்கு வந்தால் அவர் இராஜினாமா செய்யக்கூடும் என்பதை ரென்சி சுட்டிக்காட்டியுள்ளார், அவ்வாறானால் அது Grillo இன் M5S உட்பட ஐரோப்பிய-ஒன்றிய விரோத அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்குக் கொண்டு வர சாத்தியமுள்ளது.

இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய அமைப்பின் ஒழுங்கமைப்பு மற்றும் ஐரோப்பாவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவு தீவிரமடைந்து வருவதற்கு மத்தியில், தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் மற்றும் உலக பொருளாதாரத்திற்கும் இடையிலான மோதலே எல்லா இடங்களிலும் வெளிப்பட்டு வருகிறது. ஜூனில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதென பிரிட்டன் வாக்களித்த பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோவின் உடைவை நேரடியாக அச்சுறுத்தும் வகையில், இத்தாலியில் ஐரோப்பிய-ஒன்றிய எதிர்ப்பு ஆட்சி ஒன்று உருவாவதற்கான ஒரு பலமான சாத்தியக்கூறு அங்கே நிலவுகிறது.

நாளை, ஆஸ்திரிய சுதந்திர கட்சியின் (Austrian Freedom Party - FPÖ) ஜனாதிபதி வேட்பாளரான நோர்பேர்ட் ஹோஃபர் உம், மேற்கு ஐரோப்பாவின் முதலாவது அதி-வலது அரசு தலைவராக ஆக முடியும், இது FPÖ தலைவர் Heinz-Christian Strache சான்சிலர் பதவிக்கு வருவதற்கான வாய்ப்புக்கு அடித்தளமிடுகிறது.

ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் சுயாதீனமாக அணிதிரட்டும் நிலைப்பாட்டிலிருந்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்த சர்வஜன வாக்கெடுப்பை எதிர்க்கிறது. ரென்சியின் சர்வஜன வாக்கெடுப்பை எதிர்க்கும் இத்தாலிய தொழிலாளர்களும் இளைஞர்களும் ஐரோப்பாவெங்கிலும் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்களின் ஒரு பொதுவான எதிரியையே முகங்கொடுக்கிறார்கள்: அது, மேலும் வேகமாக சர்வாதிகாரத்தை நோக்கி உந்திச் செல்லும் விதத்தில் ஆழ்ந்த சிக்கனக் கொள்கை, இராணுவவாதம் மற்றும் போர் ஆகிய திட்டநிரலைக் கொண்டுள்ள ஒரு முதலாளித்துவ வர்க்கமாகும்.

இத்தாலியிலும், ஐரோப்பா எங்கிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஆழ்ந்த மற்றும் வெடிப்பார்ந்த எதிர்ப்பு உள்ளது. ஆனால் இந்த எதிர்ப்பு ஒரு தெளிவான அரசியல், வரலாற்று முன்னோக்கின் அடிப்படையிலான போராட்டத்தில் ஐக்கியப்படுத்தப்பட்டு அணிதிரட்டப்பட வேண்டும். Rifondazione மற்றும் அதன் கூட்டாளிகள் முதலாளித்துவ கட்சிகள் என்பதையும், அவை தொழிலாளர்களுக்கு ஒரு முட்டுச் சந்து என்பதையும் நிரூபித்துள்ளன.

ஆளும் உயரடுக்குகள் சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு திரும்புகின்ற நிலையில், ஒரு சர்வதேச புரட்சிகர போராட்டமே தொழிலாள வர்க்கத்திற்கான ஒரே நம்பகமான விடையிறுப்பு என்ற முன்னோக்கில் தொழிலாளர்களை வென்றெடுக்கும் போராட்டத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, தன்னை புதிய அரசியல் தலைமையாக முன்னெடுத்து வருகிறது, அது கட்டமைக்கப்பட வேண்டும். மதிப்பிழந்த ஐரோப்பிய முதலாளித்துவம் மற்றும் அதன் அரசியல் அமைப்புகளின் முறிவை எதிர்கொண்டுள்ள நிலையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஐரோப்பிய ஒன்றியத்தை தூக்கியெறிந்து, அதனிடத்தில் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளைப் பிரதியீடு செய்யும் முன்னோக்கை முன்னெடுக்கிறது.