ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The 2016 US election and the crisis of the two-party system

2016 அமெரிக்க தேர்தலும், இரு-கட்சி ஆட்சிமுறையின் நெருக்கடியும்

Barry Grey
1 November 2016

தேர்தல் நாளுக்கு ஒரு வாரமே இருக்கையில், கருத்துக்கணிப்புகள் இறுக்கமாகவும் மற்றும் முடிவுகள் நிச்சயமின்றியும் இருப்பதோடு, ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் அமைப்புமுறையும் முன்பில்லா வகையில் மத்திய புலனாய்வுத்துறையின் (FBI) தலையீட்டால் கொந்தளிப்புக்குள் தள்ளப்பட்டுள்ளது. ஹிலாரி கிளிண்டன் ஒரு தனியார் மின்னஞ்சல் சர்வரைப் பயன்படுத்தியது மீதான விசாரணையில் ஒரு புதிய போக்கை எடுத்துரைத்து வெள்ளியன்று FBI இயக்குனர் ஜேம்ஸ் கோமெ காங்கிரஸ் க்கு அனுப்பிய கடிதம், அரசு எந்திரத்தினுள் இருந்த ஆக்ரோஷ மோதல் மீதான திரையை விலக்கி உள்ளது.   

இரகசிய இராஜாங்க தகவல்களை கிளிண்டன் முறைகேடாக கையாண்டுள்ளார் என்ற குற்றஞ்சாட்டின் மீது இன்னும் ஆழமாக புலனாய்வு செய்யுமாறும் மற்றும் பல கோடி டாலர் மதிப்பிலான கிளிண்டன் அறக்கட்டளை சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் மீது பிரத்யேக விசாரணையை மேற்கொள்ளுமாறும் உள்ளூர் FBI அலுவலகங்கள் கோரி வருகின்றன என்பதையும் மற்றும் கிளிண்டன் விசாரணை கூர்மையான பிளவுகளை உருவாக்கி உள்ளதையும் FBI மற்றும் நீதித்துறை அதிகாரிகள் பலர் வெள்ளிக்கிழமையில் இருந்து வெளியில் தெரிந்தால் தெரியட்டும் என்று விட்டுவிட்டுள்ளனர். கிளிண்டனின் மின்னஞ்சல்கள் மீதான விசாரணை முடிந்துவிட்டதாகவும் மற்றும் எந்த குற்றவியல் குற்றச்சாட்டுக்களும் கொண்ட வர வேண்டியதில்லை என்றும் கடந்த ஜூலையில் கோமெ அறிவித்த பின்னர் இந்த உட்பகை மோதல் தீவிரமடைந்தது. 

கோமெ காங்கிரஸிற்கான அவரது கடிதத்துடன், கிளிண்டனுக்கு எதிராக இன்னும் ஆக்ரோஷமான நடவடிக்கைக்கு அழைப்புவிடுக்கும் கன்னையின் தரப்பில் தலையீடு செய்தார். நவம்பர் 8 தேர்தலுக்கு வெறும் 11 நாட்கள் இருக்கையில், கூடுதல் மின்னஞ்சல்களை அம்முகமை மீளாய்வு செய்வதை பகிரங்கமாக்குவதென்ற கோமெ இன் முடிவை அவர்கள் எதிர்க்கின்றனர் என்பது வெளியில் தெரிந்தால் தெரியட்டும் என்று நீதித்துறை அதிகாரிகள் விட்டுவிட்டுள்ளனர். 

ஜனநாயகக் கட்சி மற்றும் கிளிண்டன் பிரச்சாரம், அத்துடன் சேர்ந்து முன்னாள் அட்டார்னிகளது ஜெனரல், குடியரசு கட்சி அத்துடன் ஜனநாயக கட்சி ஆகியவை கோமெ இன் நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளன. மத்திய அரசு பணியாளர்கள் ஏதேனும் ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக பகிரங்கமாக நடந்து கொள்வதை தடுக்கும் ஹாட்ச் சட்டத்தை (Hatch Act) மீறியிருப்பதாக கோமெ ஐ குற்றஞ்சாட்டி ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட செனட் உறுப்பினர் ஹாரி ரீட் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். FBI தலைவர் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டுமென குறைந்தபட்சமாக ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கோரினார்.

ஒருசில வாரங்களுக்கு முன்னர் தான், கிளிண்டனும் ஜனநாயகக் கட்சியும் தேர்தல் சீர்குலைக்கப்பட்டிருப்பதாக ட்ரம்ப் இன் குற்றச்சாட்டுக்களை சீற்றத்தோடு கண்டித்தனர். அதுபோன்ற குற்றச்சாட்டுக்கள், அமெரிக்க தேர்தல்கள் மற்றும் அமெரிக்க ஜனநாயகத்தின் புனிதத்தன்மை மீது சுமத்தப்படும் ஒரு தேசவிரோத களங்கம் என்றவர்கள் கூறினர். இப்போது, சூழ்நிலைகள் மாறியதும், அவர்களுக்கு எதிராக வாக்குகளைச் சீர்குலைக்க FBI முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி அவர்கள் வெறுப்போடு கூச்சலிடுகிறார்கள்.

உண்மையில் ஆளும் வர்க்கத்தின் இரண்டு கன்னைகளுமே அவர்களது சண்டைகளை நடத்த மோசடி குற்றச்சாட்டு முறைகளை பயன்படுத்துகின்றன. கடந்த பல மாதங்களாக, ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப் க்கு எதிராக பாலியல் முறைகேடுகள் மற்றும் நவ-மக்கார்த்தியிசத்தின் மீதும், ட்ரம்ப் கிரெம்ளினின் ஒரு பினாமி என்ற இட்டுக்கட்டப்பட்ட கூற்றுகளின் மீதும் அவர்களது பிரச்சாரத்தை மையப்படுத்தி உள்ளன. இத்தகைய குற்றச்சாட்டுக்களை கோமெ க்கான அவரது கடிதத்தில் ரீட் இரட்டிப்பாக்கி இருந்தார், “டோனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது உயர்மட்ட ஆலோசகர்கள் மற்றும் ரஷ்ய அரசாங்கத்திற்கு இடையிலான நெருக்கமான உறவுகள் மற்றும் ஒருங்கிணைப்புகள்—வெளிப்படையாகவே அமெரிக்காவிற்கு எதிரான இந்த வெளியுறவு நலன்—குறித்த வெடிப்பார்ந்த தகவல்களை…" பகிரங்கமாக்க மறுத்ததற்காக FBI ஐ அவர் குற்றஞ்சாட்டினார்.

ட்ரம்ப், அவர் பங்கிற்கு, ஊடகங்கள் கிளிண்டனுக்கு ஆதரவாக பாரபட்சமாக இருப்பதாக குறிப்பிட்டதோடு, கிளிண்டனை வழக்கில் இழுக்க தவறியதற்காக FBI ஐ கண்டித்தார், மேலும் தேர்தல் நாளில் புலம்பெயர்ந்தோர் மற்றும் சிறுபான்மையினர் மேலோங்கிய மூகங்கள் வாக்களிப்பதற்காக திட்டமிட்டு திணிக்கப்படுவார்கள் என்று குற்றஞ்சாட்டி அவர் புலம்பெயர்ந்தோர்-விரோத மற்றும் இனவாத உணர்வுகளுக்குப் பகிரங்கமாக முறையிட்டார்.

உண்மையில் இந்த ஒட்டுமொத்த தேர்தலுமே உண்மையான ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதாகும். இந்த கட்சிகளால் உழைக்கும் மக்களின் கவலைகளை சரி செய்யும் எந்த கொள்கைகளையும் வழங்க முடியாது. போர், சமூக சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் என பற்றியெரியும் பிரச்சினைகளுக்குக் குழிபறிக்கவே இந்த குறைகூறல்களும் மற்றும் மோசடி-பழியுரைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இந்த சமீபத்திய திருப்பமானது, கிளிண்டன் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் எந்த பிற்போக்குத்தனமான அடித்தளத்தில் அவர்களது பிரச்சாரத்தை அமைத்துள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அவர்கள் இராணுவ தலையீட்டுக்கு ஆதரவாளராக இருந்த கிளிண்டனின் மதிப்புகளை ஊக்குவித்து, அதேவேளையில் ட்ரம்ப் ஐ தலைமை தளபதியாக சேவையாற்ற இலாயக்கற்றவர் என்று அறிவிப்பதன் மூலம் குடியரசு கட்சி தலைவர்கள் மற்றும் வாக்காளர்களின் ஆதரவை அத்துடன் இராணுவ/உளவுத்துறை ஸ்தாபகத்தின் ஆதரவையும் வென்றெடுக்கும் முயற்சியில், பாசிசவாத ட்ரம்ப் ஐ வலதிலிருந்து எதிர்க்க முனைந்துள்ளனர்.

தொழிலாளர்களின் அவலநிலை மீது அவர்கள் அரிதாகவே மூடிமறைத்திருக்கும் அலட்சியமும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்குள் ஆதரவின்மையும் அரசுக்குள் உள்ள ட்ரம்ப்-ஆதரவு சக்திகளது சூழ்ச்சிகளுக்கு அவர்களை பெரிதும் பலியாக்கி உள்ளது.

இந்த அபிவிருத்திகள் பேர்ணி சாண்டர்ஸ் இன் துரோகப் பாத்திரத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. தன்னை ஒரு சோசலிசவாதியாக மற்றும் "பில்லியனர் வர்க்கத்தின்" எதிர்ப்பாளராக காட்டியதன் மூலமாக தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களிடையே பாரிய ஆதரவை வென்ற அவர், சமூக எதிர்ப்பை வோல் ஸ்ட்ரீட் இன் விருப்பத்திற்குரிய வேட்பாளரான கிளிண்டனது பிரச்சாரம் மற்றும் ஜனநாயகக் கட்சிக்குப் பின்னால் திசைதிருப்புவதற்காக அவரது செல்வாக்கை பயன்படுத்த முனைந்தார். அவ்விதத்தில் அவர் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கம் எழுச்சியடைவதை முன்கூட்டியே தடுப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார். 

அடுத்த செவ்வாயன்று தேர்தலில் எந்த வேட்பாளர் ஜெயித்தாலும், இருகட்சி ஆட்சிமுறை நெருக்கடியில் எதுவும் தீர்க்கப்பட போவதில்லை. அமெரிக்க வரலாற்றில் மிகவும் செல்வாக்கிழந்த இவ்விரு வேட்பாளர்களுமே, பரந்தளவிலான மக்களால் வெறுக்கப்படுகிறார்கள் என்பதோடு, பெரும்பான்மை அமெரிக்க மக்களால் தேர்தல் முடிவு நியாயமற்றதாக பார்க்கப்படும். ட்ரம்ப் இன் ஒரு வெற்றி, பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களால் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு போர் பிரகடனமாக பார்க்கப்படும். கிளிண்டனின் ஒரு வெற்றி, நடைமுறையில் இருக்கும் பிற்போக்குத்தனத்தின் ஒரு தொடர்ச்சியாக பார்க்கப்படும்.

அரசுக்குள் நிலவும் கடுமையான மோதல்களும் குறையப் போவதில்லை. இவை புறநிலைரீதியில் அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடியில் வேரூன்றி உள்ளன. பொருளாதார நெருக்கடியும் மற்றும் வீழ்ச்சியும், முன்பினும் பரவலாகி வரும் சமூக துருவமுனைப்பாடு மற்றும் தீவிரமடைந்துவரும் புவிசார் அரசியல் மோதல்களும் பேராபத்தான வகையில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் அடித்தளங்களையே அரித்துக் கொண்டிருக்கின்றன.

2016 தேர்தல்களில் வெடித்துள்ள இந்த முன்நிகழ்ந்திராத அரசியல் நெருக்கடி ஒரு நீடித்த நிகழ்முறையின் விளைவாகும். அரசியல் அமைப்புமுறையின் உடைவானது, 1998 இல் ஒரு பாலியல் முறைகேடு அடிப்படையில் பில் கிளிண்டன் மீதான பதவி நீக்க குற்றவிசாரணையில் பகிரங்கமான மற்றும் வெடிப்பார்ந்த வடிவம் எடுத்தது. கிளிண்டன் மீது குற்றவிசாரணை நடத்துவதற்கு பிரதிநிதிகள் சபை வாக்களித்ததும், “அமெரிக்கா உள்நாட்டு போரை நோக்கி நகர்கிறதா?” என்று தலைப்பிட்டு உலக சோசலிசம் வலைத் தளம் வெளியிட்ட ஒரு தலையங்கத்தில், நாம் பின்வருமாறு எழுதினோம்:

“வாஷிங்டன் நெருக்கடியானது சிக்கலான அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிகழ்முறைகளின் இடைத்தொடர்பில் இருந்து எழுகின்றது. முதலாளித்துவ ஜனநாயகம் தீர்க்கவியலாத திரண்ட மற்றும் அதிகரித்த முரண்பாடுகளின் சுமைக்கு அடியில் உடைந்து கொண்டிருக்கிறது.”

அந்த திருப்புமுனை சம்பவத்தைத் தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு தேர்தல் களவாடப்பட்டது மற்றும் அதற்கு ஓராண்டுக்குப் பின்னர் 9/11 தாக்குதல்களை அடுத்து "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" தொடங்கப்பட்டது. ஜனநாயக உரிமைகள் மீதான நேரடியாக தாக்குதல் மற்றும் பொலிஸ் அரசு ஆட்சி கட்டமைப்பை எழுப்பியமை, பெருமந்த நிலைமைக்குப் பிந்தைய மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி, மற்றும் செல்வந்தர்களுக்கு இன்னும் கூடுதலாக செல்வவளத்தைக் கைமாற்றியமை ஆகிவற்றுடன் சேர்ந்து, இடைவிடாத மற்றும் எப்போதும் விரிவாக்கப்பட்டே வந்துள்ள கடந்த பதினைந்து ஆண்டுகால போரானது, இராணுவம் மற்றும் உளவுத்துறையின் "அரசுக்குள் மறைமுக அரசு" (deep state) நடத்துவதற்கான அதிகாரத்தை மட்டுமே அதிகரித்துள்ளது மற்றும் அமெரிக்காவில் முதலாளித்துவ ஆட்சியின் பாரம்பரிய அரசியலமைப்பு கட்டமைப்பை இன்னும் கூடுதலாக அரித்துள்ளது.

இத்தகைய நிகழ்முறைகள் 2016 தேர்தலின் படுமோசமான காட்சியிலேயே பெருமதியற்ற வெளிப்பாட்டைக் கண்டுள்ளது. ஒட்டுமொத்த அரசியல் அமைப்பு மீதான ஏமாற்றமும் மற்றும் சமூக எதிர்ப்பின் வளர்ச்சியும் மேலாளுமை கொண்டுள்ள ஒரு தேர்தலில், வாக்காளர்கள் மிகப் பணக்கார 1 சதவீதத்தினரின் இரண்டு ஊழல்பீடித்த, வலதுசாரி பிரதிநிதிகளில் ஒருவரைத் "தேர்ந்தெடுக்க" விடப்பட்டுள்ளனர்.

நிதியியல் பிரபுத்துவத்தின் இலாப உந்துதலை அல்ல, தொழிலாள வர்க்கத்தின் தேவைகள் மற்றும் நலன்களைப் பூர்த்தி செய்யும் ஒரு வேலைத்திட்டத்திற்காக போராடும் ஒரு சுயாதீன சக்தியாக தொழிலாள வர்க்கம் இந்த அரசியல் நெருக்கடிக்குள் தலையிடுவது அதிமுக்கியமாகும். இதற்கு பின்னர் விரைவிலேயே, தொழிலாள வர்க்க வாழ்க்கை நிலைமைகள் மீதான இன்னும் அதிக காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள், சர்வாதிகாரம் மற்றும் புதிய உலக போரை நோக்கி தீவிரப்பட்ட ஒரு இயக்கம் ஆகியவற்றுடன் இந்த இருகட்சி ஆட்சிமுறையின் நெருக்கடியானது மேற்கொண்டும் வலதை நோக்கியே சாயும்.

இங்கே தான் சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியத்துவம் உள்ளது. அதன் வேட்பாளர்களான ஜனாதிபதி வேட்பாளராக ஜெர்ரி வைட் மற்றும் துணை ஜனாதிபதியாக நைல்ஸ் நிமூத் மட்டுமே நிஜமான மற்றும் தற்போதைய போர் அபாயத்தைத் தொழிலாள வர்க்கத்திற்கு எச்சரிக்கையூட்டி வருகிறார்கள் மற்றும் அதை நிறுத்த ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் மட்டுமே தேர்தலுக்குப் பின்னர் வரவிருக்கின்ற பாரிய போராட்டங்களுக்கு முன்கூட்டியே தொழிலாள வர்க்கத்தின் ஓர் அரசியல் தலைமைக்கு தயாரிப்பு செய்து வருகிறது.

போர், சமத்துவமின்மை மற்றும் ஒடுக்குமுறையை எதிர்க்கும் அனைவரும் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரத்தை செயலூக்கத்துடன் ஆதரித்து, தொழிலாள வர்க்கத்தில் புதிய புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதற்கு போராடுவதில் இணைய வேண்டும்.