ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump begins selecting ultra-right cabinet

அதிதீவிர வலது மந்திரிசபையை தேர்ந்தெடுப்பதன் மூலமாக ட்ரம்ப் தொடங்குகிறார்

By Patrick Martin
19 November 2016

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளியன்று அவரது முதல் இரண்டு மந்திரிசபை நியமனங்களையும், அத்துடன் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் தேர்வையும் அறிவித்தார். அட்டார்னி ஜெனரலாக அலபாமாவின் செனட்டர் ஜெஃப் செஸ்சன்ஸ் (Jeff Sessions), தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகராக ஓய்வுபெற்ற ஜெனரல் மைக்கல் ஃப்ளின் (Michael Flynn) மற்றும் சிஐஏ இயக்குனராக பிரதிநிதி மைக் பொம்பியோ (Mike Pompeo) ஆகிய மூன்று நியமனங்கள், புதிய குடியரசுக் கட்சி நிர்வாகத்தின் அதிதீவிர வலது, இராணுவவாத மற்றும் ஜனநாயக-விரோத குணாம்சத்தை அடிக்கோடிடுகிறது.

இந்த தேர்ந்தெடுப்பிற்கு ஜனநாயகக் கட்சியினது விடையிறுப்பால், ட்ரம்ப், ஒரு அதிதீவிர வலதுசாரி திட்டநிரலுடன் முன்னோக்கி செல்வதற்கும், குறிப்பிடத்தக்க எந்த அரசியல் எதிர்ப்பையும் அவர் எதிர்கொள்ள மாட்டார் என்பதில் நம்பிக்கையோடு இருப்பதற்கும் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்டு 10 நாட்களில், முன்னணி ஜனநாயக கட்சியினர், அடுத்தடுத்து, ட்ரம்பை வாழ்த்தவும் மற்றும் அவரது தேசியவாத கொள்கையின் முக்கிய அம்சங்களை நடைமுறைப்படுத்துவதில் அவருடன் இணைந்து வேலை செய்யவும் முன்வந்துள்ளனர்.

பாசிசவாத மற்றும் வெள்ளையின தேசியவாத அமைப்புகளுடன் நெருக்கமான தொடர்புகள் கொண்ட, ப்ரைய்ட்பார்ட் செய்தியின் (Breitbart News) முன்னாள் தலைவர் ஸ்டீபன் பானனை "தலைமை மூலோபாயவாதியாக" ட்ரம்ப் தேர்ந்தெடுத்தமை, ஜனநாயகக் கட்சியினர் மற்றும் ஊடகங்களால் பெரிதும் உதறி விடப்பட்டது. அரசியல் மற்றும் இராணுவ ஸ்தாபகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப் இன் அரசு நியமனங்களும், பொதுவாக அதே போக்கை ஒட்டி இருக்கின்றன.

மத்திய உளவுத்துறை மற்றும் நீதித்துறையின் குடியுரிமை துறைகள் இரண்டையும் கண்காணிக்கும் அட்டார்னி ஜெனரலைப் பொறுத்த வரையில், ட்ரம்ப் செனட்டர் செஸ்சன்ஸை தேர்ந்தெடுத்துள்ளார், இவரது இனவாத அனுதாபங்களுக்காக 30 ஆண்டுகளுக்கு முன்னர் குடியரசு கட்சி கட்டுப்பாட்டில் இருந்த செனட்டால் ஒரு மத்திய நீதிபதியாகும் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்காக நன்கறியப்பட்ட ஒரு அதிதீவிர வலது பிரபலமாவார்.

அமெரிக்காவின் தலைமை சட்ட அமுலாக்க அதிகாரியாக ஆவதற்கான செஸ்சன்ஸ் இன் முக்கிய தகுதியாக இருப்பது, ட்ரம்புக்கான அவரது விசுவாசமாகும், அவரது பரந்த வணிக சாம்ராஜ்ஜியம் மோசடி மற்றும் வழக்குகளில் மூழ்கி உள்ளது, இது ஊழல் மற்றும் நலன்களுக்கான மோதல்களுக்குள் விசாரணை மேற்கொள்வதற்கு அவரது நிர்வாகத்தை ஒரு நிதர்சன இலக்காக்குகிறது.

ட்ரம்ப் இன் ஜனாதிபதி பிரச்சாரத்தை ஆமோதித்த முதல் குடியரசு கட்சி செனட்டர் செஸ்சன்ஸ் ஆவார், மற்றும் ட்ரம்ப் நடைமுறையளவில் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஆகும் வரையில் அவருக்கு ஆதரவு வழங்கிய ஒரேயொருவர் அவர் மட்டுமே ஆவார்.

அலபாமாவின் செல்மாவில் 1946 இல் பிறந்த செஸ்சன்ஸ், ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங் மற்றும் ஜோன் லீவிஸ் தலைமையில் அங்கே நடந்த பிரபலமான குடியுரிமை அணிவகுப்பு காலகட்டத்தில் 18 வயதில் இருந்தார். 1969 இல் ஹன்டின்ங்டன் கல்லூரியிலும், பின்னர் 1973 இல் அலபாமா பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த அவர், விரைவிலேயே மொபில் நகரத்தில் இருந்த அமெரிக்க அட்டார்னியின் அலுவலகத்தில் சேர்ந்தார். 1981 இல், ரோனால்ட் ரீகன் அவரை அலபாமாவின் தெற்கு மாவட்ட அமெரிக்க அட்டார்னியாக பெயரிட்டார், அப்பதவியில் அவர் 12 ஆண்டுகள் இருந்தார்.

இக்காலக்கட்டத்தில், ஆல்பேர்ட் மற்றும் எவ்லின் டர்னர் மற்றும் ஸ்பென்சர் போக் ஆகிய மூன்று முன்னாள் குடியுரிமை தொழிலாளர்கள் மீது வயதான கிராமப்புற கறுப்பின வாக்காளர்கள் சம்பந்தமான அவர்களது நடவடிக்கைகளுக்காக வாக்குரிமை சட்டத்தின் ஒரு பிரிவின் கீழ் வாக்கு மோசடி குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து, அவர் இழிவுகரமாக வேட்டையாடும் வழக்கு விசாரணையை நடத்தினார். அவர்கள் மூவரும் விசாரணைக்கு இழுக்கப்பட்டார்கள், ஆனால் இனரீதியில் கலந்திருந்த நீதி விசாரணைக் குழு வெறும் மூன்று மணி நேரம் விசாரித்த பின்னர் அவர்கள் மீதான சகல வழக்குகளில் இருந்தும் அவர்களை ஒருமனதாக விடுவித்தது. இந்த சட்ட கேலிக்கூத்திற்கு நான்கு மாதங்களுக்குப் பின்னர், அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் இருந்த காலியிடத்தை நிரப்ப ரீகன் செஸ்சன்ஸை நியமித்தார்.

நீதித்துறையில் இருந்த செஸ்சன்ஸ் இன் நான்கு சக-தொழிலாளர்கள், ஓர் அலுவலக விவாதத்தின் போது Ku Klux Klan ஐ ஒரு கறுப்பின அட்டார்னி "சிறுவன்" என்று அழைத்ததற்கு ஆதரவான குறிப்புகளில் இருந்து பல இனவாத கருத்துக்கள் மீது சாட்சியம் கூறினர். NAACP மற்றும் அமெரிக்க குடிமக்கள் சுதந்திர கழகம் ஆகிய இரண்டையும் "அமெரிக்கர் அல்லாதவர்கள்" என்றும் "கம்யூனிஸ்ட்" என்றும் வர்ணித்ததாக செஸ்சன்ஸ் அவரே ஒப்புக் கொண்டார். இறுதியில் செனட் தளத்தின் வாக்கெடுப்புக்கு அவரை வேட்பாளராக கொண்டு வர குடியரசு கட்சி கட்டுப்பாட்டில் இருந்த செனட் இன் நீதித்துறை குழுவே மறுக்கும் அளவிற்கு அரசியல் எதிர்ப்பு பலமாக இருந்தது.

நீதியரசராக இருக்க மறுக்கப்பட்ட நிலையில், அமெரிக்க வழக்கறிஞராக தொடர்ந்த செஸ்சன்ஸ், தெற்கு இனவாதிகளது சர்ச்சைக்குரிய வழக்காக மாறியிருந்த குற்றகரமாக அலட்சியப்படுத்துவது மீது அரசியல் தொழில்வாழ்வைக் கட்டமைத்தார். அவர் 1994 இல் அலபாமா தலைமை அரசு வழக்கறிஞர் ஆவதற்கு போட்டியிட்டு வென்றார், பின்னர் 1996 இல் காலியாக இருந்த அமெரிக்க செனட் ஆசனத்திற்குப் போட்டியிட்டார், முதலில் குடியரசுக் கட்சியின் உள்கட்சி தேர்தலில் வென்று பின்னர் பொது தேர்தலில் வென்றார். அவர் மூன்று முறை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், 2014 இல் அவரது கடைசி பிரச்சாரத்தில், ஒரு சம்பிரதாயத்திற்கான ஜனநாயகக் கட்சி போட்டியாளர் கூட இல்லாமல் எதிர்ப்பின்றி போட்டியிட்டார்.

குறிப்பாக புலம்பெயர்ந்தோர் சம்பந்தமாக அமெரிக்க செனட்டில் உள்ள மிகவும் இணக்கமான பிற்போக்குத்தன பிரபலங்களில் செஸ்சன்ஸ் ஒருவராவார். அவரது கண்ணோட்டத்திற்கு "உள்ளூர்காரர்" என்பது மிக பொருத்தமாக ஏற்புடைய விளக்கம் என்று அவர் ஒருமுறை Roll Call பதிப்பிற்குக் கூறினார். சட்டபூர்வ மற்றும் சட்டவிரோத புலம்பெயர்வுக்கு அவரது கடுமையான எதிர்ப்பே, ட்ரம்ப் பிரச்சாரத்திற்கான அவரது ஆரம்ப உத்வேகத்திற்கு வெளிப்படையான அடித்தளமாக இருந்தது.

ஹிலாரி கிளிண்டன் வெளியுறவுத்துறை செயலராக இருந்தபோது அவர் ஒரு தனியார் மின்னஞ்சல் சர்வரை பயன்படுத்தியதன் மூலம் எந்த குற்றமும் செய்துவிடவில்லை என்ற FBI இயக்குனர் ஜேம்ஸ் கோமெ இன் கண்டுபிடிப்பை மிக சமீபத்தில் அவர் விமர்சித்தார். அட்டார் ஜெனரலாக செஸ்சன்ஸ், கோமெ இன் நேரடியான உயரதிகாரியாக இருப்பார் மற்றும் கிளிண்டன் விசாரணையை மீண்டும் திறக்க அல்லது ட்ரம்ப் அறிவுறுத்தியதைப் போல ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க அவருக்கு உத்தரவிட முடியும்.

உறுதி ஆகிவிட்டால், 1960 களின் குடியுரிமை சீர்திருத்தங்களுக்குப் பின்னர் குடியரசு கட்சிக்குள் தெற்கு இனப்பாகுபாட்டாளர்கள் திரளாக நுழைந்ததற்கு பிந்தைய Deep South இல் இருந்து வரும் முதல் குடியரசு கட்சி அட்டார்னி ஜெனரலாக செஸ்சன்ஸ் இருப்பார்.

ஓய்வூபெற்ற லெப்டினன்ட்-ஜெனரல் மைக்கல் ஃப்ளின் ஐ பொறுத்த வரையில், ட்ரம்ப், வெளியுறவு மற்றும் இராணுவ கொள்கையை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஒரு முன்னாள் இராணுவ உளவுத்துறை அதிகாரிக்கு வழங்கியுள்ளார். இது, ட்ரம்ப் நிர்வாகம் அதற்கு முந்தைய ஜனநாயகக் கட்சியை விட இன்னும் கூடுதலாக மூர்க்கத்தனத்தோடு இராணுவ ஆக்ரோஷத்தில் ஈடுபடும் என்பதற்கு ஒரு தெளிவான அறிகுறியாகும்.

ரோட் தீவின் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்திலிருந்து ஜனநாயகக் கட்சியின் அங்கத்தவராக இருந்த ஃப்ளின், West Point இல் [அமெரிக்க இராணுவ பயிற்சி பள்ளியில்] இருந்து அல்ல, ஒரு ROTC [இராணுவ அதிகாரிகளுக்கான கல்லூரி பயிற்சி] திட்டத்திலிருந்து இராணுவத்திற்குள் நுழைந்து, இராணுவ உளவுத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் சிறப்புப்படைகளது படுகொலை நடவடிக்கைகளுடன் இணைந்திருந்தார்.

ஃப்ளின், 2014 இல் ஒபாமா நிர்வாகத்துடன் முரண்பட்டார், அல் கொய்தா மற்றும் பின்னர் ISIS உடனான மோதலை முஸ்லீம்களுக்கு எதிரான போராக சித்தரிக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தியதன் காரணமாக தேசிய உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பரால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். யதார்த்தத்துடன் சம்பந்தமில்லாத ஆனால் அமெரிக்கா இஸ்லாமிய போராளிகளுக்கு எதிராக ஓர் "உலக போரில்" ஈடுபட்டுள்ளது என்ற கருத்துருவை பலப்படுத்தும் வலியுறுத்தல்களான, “ஃப்ளின் உண்மைகள்" என்று அவர் உதவியாளர்கள் எதை அழைக்கிறார்களோ அதை தழுவதற்கே அவரது ஆவேசம் இட்டுச் சென்றது என்று பத்திரிகை செய்திகள் குறிப்பிடுகின்றன.

செஸ்சன்ஸ் போலவே, ஃப்ளின் இன் பிரதான தகுதியும் ட்ரம்புக்கான நிபந்தனையற்ற விசுவாசமாகும். அவர் முன்னதாக தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் மீது ஒரு ஆலோசகராக கையெழுத்திட்டிருந்தார், நடைமுறையளவில் ஒட்டுமொத்த இராணுவ-உளவுத்துறை எந்திரமும், இப்பகுதியில் குடியரசு கட்சியின் முக்கிய நிபுணர்களும் கூட, ஹிலாரி கிளிண்டனை ஆதரித்த ஒரு பிரச்சாரம் முழுவதிலும் இவர் ட்ரம்ப் ஐ ஆதரித்திருந்தார்.

இஸ்லாமிய சட்டத்தின் ஒரு வடிவமான ஷேரியா (Sharia) அமெரிக்கா முழுவதிலும் பரவி வருகிறது என்றும், ஒபாமா நிர்வாகம் இந்த அச்சுறுத்தலைக் குணாம்சப்படுத்த "தீவிர இஸ்லாமிய பயங்கரவாதம்" என்ற பதத்தைப் பிரயோகிக்க மறுப்பதால் அது ISIS பரவுவதை எதிர்க்க தவறியுள்ளது என்றும் கூறி, அப்போதிருந்து அவர் இஸ்லாம் உடனான பிரச்சினையில் ஆழமடைந்து வந்த ஆவேசத்தில் அக்கறை காட்டியுள்ளார்.

ஒரு பத்திரிகை விபரத்தின்படி, ஃப்ளின் கடந்த கோடையில் டெக்சாஸ் இன் ஒரு வலதுசாரி குழுவின் முன் தோன்றி, “இஸ்லாமை நான் ஒரு மதமாக பார்க்கவில்லை. அதையொரு அரசியல் சித்தாந்தமாக பார்க்கிறேன்,” என்று அறிவித்தார். இஸ்லாம் "உலகளவில், குறிப்பாக மேற்கிலும் முக்கியமாக அமெரிக்காவிலும், ஒரு மதமாக தன்னைத்தானே காட்டிக் கொள்கிறது… ஏனென்றால் நாம் மத சுதந்திரம் என்று எதை குறிப்பிடுகிறோமோ அதன் பின்னால் அதனால் ஒளிந்து கொண்டு தப்பித்துக் கொள்ள முடிகிறது,” என்று அவர் தொடர்ந்து வாதிட்டிருந்தார்.

நீரில் மூழ்கடித்து சித்திரவதை செய்தல் உட்பட சித்திரவதைக்கு ஆதரவாக ட்ரம்ப் இன் அறிவிப்புகளை ஃப்ளின் ஆதரித்துள்ளார், ஒரு பேட்டியில் கூறுகையில் அவர் "கடைசி சாத்தியமான நிமிடம் வரையில் மேசையின் மீது எத்தனை சாத்தியக்கூறுகள் இருக்கிறதோ அத்தனையையும் அனுமதிப்பதை நம்புபவர்" என்று கூறியிருந்தார். மிகவும் இழிவார்ந்த விதத்தில், அவர் குடியரசுக் கட்சி தேசிய மாநாட்டில் கிளிண்டன்-விரோத, ஒபாமா-விரோத பழியுரை ஒன்றை வழங்கினார், அப்போது பிரதிநிதிகள் "அப்பெண்மணியை சிறையில் தள்ளுங்கள். அப்பெண்மணியை சிறையில் தள்ளுங்கள்" என்று கோஷமிட்டனர். ஃப்ளின் அதில் இணைந்து கொண்டார்.

சிஐஏ இயக்குனரை பொறுத்த வரையில், ட்ரம்ப் கன்சாஸ் இன் குடியரசு கட்சி பிரதிநிதி மைக் பொம்பியோவை தேர்ந்தெடுத்துள்ளார், இவர் விச்சிடாவில் தலைமையகத்தை கொண்டுள்ள கோச் தொழில்துறை பங்கு விற்பனை நிறுவனத்தின் பில்லியனர் கோச் சகோதரர்களுடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருக்கும் விச்சிடாவில் இருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர் ஆவார்.

[இராணுவ அதிகாரிகள் பயிற்சி பள்ளி] West Point இன் பட்டதாரியான பொம்பியோ 1986 இல் இருந்து 1991 வரையில் இராணுவத்தின் குண்டு துளைக்காத கவசப்பிரிவில் சேவையாற்றியவர் ஆவார், ஆனால் இவர் வெளிநாடுகளுக்கு நியமிக்கப்படவில்லை. இராணுவத்திலிருந்து வந்த பின்னர், இவர் தெற்கு கலிபோர்னியாவில் ஒரு விமான பாகங்கள் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினார், அது இறுதிபயனாக இலகுரக விமான உற்பத்தியின் மையமாக விளங்கும் கான்சாஸ் இன் விச்சிடாவிற்கு இடம் மாற்றப்பட்டது. அங்கே பொம்பியோ 2010 இல் அமெரிக்க செனட்டுக்கு போட்டியிடுவதற்காக பதவியிலிருந்து இறங்கிய ஒரு குடியரசு கட்சியாளருக்கு பதிலாக போட்டியிட்டு வென்று, அவரது அரசியல் தொழில்வாழ்வை தொடங்கினார்.

அவரது ஜனநாயகக் கட்சி எதிர்ப்பாளரும் அமெரிக்காவில் பிறந்த புலம்பெயர்ந்த இந்திய மருத்துவர்களின் மகனுமான ராஜ் கோய்லே க்கு தொந்தரவு கொடுத்ததற்காக, “அமெரிக்கருக்கு வாக்களியுங்கள், பொம்பியோவுக்கு வாக்களியுங்கள்" என்று வலியுறுத்தும் பதாகைகளைக் கொண்ட இவரது முதல் பிரச்சாரம் குறிப்பிடத்தக்கதாகும். உள்ளூரில் கருக்கலைப்பு செய்பவர்கள் மீதான தாக்குதல்களை மையமிட்டு நீண்டகாலமாக மதவாத வலது நடவடிக்கையின் களமாக விளங்கிய ஒரு பகுதியில், ஆதரவாளர்கள் கோய்லே மீது "தலைப்பாகைக்காரர்" என்றும், கிறிஸ்துவர்-அல்லாதவர் என்றும் அவதூறான தாக்குதல்களை பரப்பினர்.

பொம்பியோ, குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் செனட்டர் மார்கோ ருபியோவை ஆதரித்தார், ருபியோ திரும்ப பெற்றுக் கொண்ட பின்னர் தான் ட்ரம்ப் ஐ ஆமோதித்தார். செஸ்சன்ஸ் மற்றும் ஃப்ளின் போல இல்லாமல், இந்த புதிய நிர்வாகத்துடனான அவரது அரசியல் தொடர்பு, ட்ரம்ப் கிடையாது, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆவார். பொம்பியோ மற்றும் பென்ஸ் இருவரும் 2010 இல் இருந்து 2014 வரையில் சேர்ந்தே சேவையாற்றினார்கள், மற்றும் பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சி பெரும்பான்மையின் மிகவும் பழமைவாத கன்னையின் பாகமாக ஓர் அரசியல் அறிக்கையை அபிவிருத்தி செய்தார்கள்.

பிரதிநிதிகள் சபையில் இருந்த அவரது ஆண்டு ஆண்டுகள் முழுவதும் பொம்பியோ, எட்வார்ட் ஸ்னோவ்டன் தேசிய பாதுகாப்பு முகமையை அம்பலப்படுத்தியபோது, அது சட்டவிரோதமாக மொத்தமாக தரவுகளைச் சேகரிப்பதை ஆதரித்து, மிகவும் இராணுவவாத மற்றும் ஜனநாயக-விரோத கொள்கைகளுக்கு ஆதரவாக நின்றார். அவர் பிரதிநிதிகள் சபையின் உளவுத்துறை குழுவில் ஓர் அங்கத்தவர் ஆவார் மற்றும் ஹிலாரி கிளிண்டனின் ஜனாதிபதி தேர்தலை பலவீனப்படுத்த பிரதிநிதிகள் சபை குடியரசுக் கட்சி தலைவரால் அமைக்கப்பட்ட பெங்காசி மீதான பிரதிநிதிகள் சபையின் தேர்வு குழுவிலும் சேவையாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

2013 இல் போஸ்டன் நெடுந்தூர ஒட்டப்போட்டி குண்டுவெடிப்புக்குப் பின்னர், பொம்பியோ அதுபோன்ற தாக்குதல்களை ஊக்கப்படுத்துவதற்காக, முஸ்லீம் மதவாத தலைவர்களைக் கண்டித்தார். ஒபாமா நிர்வாகம் "பயங்கரவாதத்திற்கு அரசு ஆதரவளிக்கும் உலகின் மிகப்பெரிய அரசிடம்" அடிபணிந்து விட்டது என்று வாதிட்டு, அவர் ஆறு நாடுகளது ஈரான் அணுசக்தி உடன்படிக்கையை விடாப்பிடியாக கண்டித்தார். சிஐஏ தலைவராக அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னதாக, தெஹ்ரான் உடனான உடன்படிக்கையை முறிக்க அவர் தீர்மானகரமாக இருப்பதை ட்வீட்டரில் அறிவிக்கும் அளவிற்குச் சென்றார்.