ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump’s election as seen from Europe

ட்ரம்பின் தேர்தலை ஐரோப்பாவில் இருந்து பார்க்கையில்

By Alex Lantier
19 November 2016

1928 இல், அதாவது பெருமந்தநிலைக்கு முன்னறிவிப்பை வழங்கிய பங்குச் சந்தைப் பொறிவுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பாக, அத்துடன் இரண்டாம் உலகப் போரின் வெடிப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பாக, மாபெரும் மார்க்சிச புரட்சியாளரான லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார்:

“வளர்ச்சிக் காலகட்டத்தினை விடவும் நெருக்கடி காலகட்டத்தில்தான் அமெரிக்காவின் மேலாதிக்கமானது இன்னும் முழுமையாகவும், இன்னும் பகிரங்கமாகவும், இன்னும் மூர்க்கத்தனமாகவும் செயல்படும் ஆசியா, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவிலேயே கூட நடக்கலாம், அதேபோல அமைதியான முறையிலோ அல்லது போர் மூலமாகவோ நடக்கலாம், எப்படியாயினும் பிரதானமாக ஐரோப்பாவின் நலன்களை பலியிட்டே அமெரிக்கா தனது சிக்கல்களில் இருந்தும் நோய்களில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள முனையும்.”

டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை மற்றும், ஜனாதிபதியாக தேர்வாகியிருப்பவர் ஐரோப்பாவின் நலன்களை விலையாகக் கொடுத்து, ஒரு தீவிர தேசியவாத திட்டநிரலை பின்பற்ற நோக்கம் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகும் நிலையில் ஐரோப்பாவில் ஆளும் வட்டாரங்களில் இருந்தான பதட்டமான எதிர்வினைகள் ஆகியவற்றின் அரசியல் முக்கியத்துவத்தை பரிசீலிக்கும்போது மேற்கூறிய வார்த்தைகள் கருத்தில் கொள்வதற்கு உகந்ததாகும்.

வெளியேறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதியான பராக் ஒபாமா அட்லாண்டிக்கின் இரு பக்கங்களிலும் ஜனநாயகத்தின் நிலையைப் பாராட்டுவதற்கும், அத்துடன் ட்ரம்ப் தேர்வாகியிருப்பதால் அட்லாண்டிக் கடந்த உறவுகளில் ஏற்பட்டிருக்கக் கூடிய சேதம் கட்டுப்படுத்தப்பட கூடியதே என்று ஐரோப்பிய அதிகாரிகளுக்கு உறுதியளிப்பதற்கும் கடந்த வாரத்தில் ஐரோப்பாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். ஆயினும், சம்பவங்கள் அவற்றுக்கென சொந்தமான ஒரு தர்க்கத்தைக் கொண்டிருக்கின்றன.

ஏதென்ஸிலும் பேர்லினிலும், ட்ரம்ப்பின் தேர்விற்கு பெரும்பாலும் அச்சத்துடன் எதிர்வினையாற்றிய ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளுடன் ஒபாமா சந்தித்துப் பேசினார். அமெரிக்காவுக்கும் மேற்கு ஐரோப்பாவிற்கும் இடையில் 1949 இல் கையெழுத்தாகியிருந்த நேட்டோ கூட்டணியை குறைமதிப்பிற்கு உட்படுத்த அச்சுறுத்தல் விடுத்திருக்கின்ற, ஐரோப்பாவில் அணுஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து விவாதித்திருக்கின்ற, அத்துடன் சித்திரவதையை ஆவேசத்துடன் வழிமொழிந்திருக்கின்ற ட்ரம்ப்பின் எழுச்சியானது ஐரோப்பிய அரசியலை வேர் வரை உலுக்கியிருக்கிறது.

ட்ரம்ப் தேர்வாகியிருப்பதன் அர்த்தம் தொடர்பாக பிரெஞ்சு தினசரியான Le Monde கருத்து தெரிவிக்கையில், “இரண்டாம் உலகப் போரில் இருந்து அமெரிக்கா பெற்றிருந்த அதன் ‘பரந்த உள்ளம்கொண்ட மேலாதிக்க’ சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டது என்பதாகும். முதலில் பனிப்போரில், சோவியத் ஒன்றியத்திற்கு எதிராகவும், அதன்பின்னர் கம்யூனிசம் உருக்குலைந்து 1991 இல் சோவியத் ஒன்றியம் சிதறிய பின்னரும், அமெரிக்கா ’மேற்கின்’ தலையில் அமர்ந்து சுதந்திர உலகத்தை வழிநடத்தியது” என்று அது எழுதியது.

பிரிட்டிஷ் எகனாமிஸ்ட் பத்திரிகை கவலை தொனிக்கும் ஒரு தலையங்கத்தில் எழுதியது: பேர்லின் சுவர் வீழ்ந்ததற்குப் பின்னர் “வரலாறு முடிந்து விட்டதாகக் கூறப்பட்டு” அதனுடன் ”தாராளவாத ஜனநாயகத்தின்” இறுதி வெற்றியையும் கொண்டுவந்திருந்ததாய் கூறப்பட்டது. ஆனால், ட்ரம்ப்பின் தேர்வில் “அந்தப் பிரமை தகர்த்தெறியப்பட்டு விட்டது. வரலாறு திரும்புகிறது — பழிவாங்கும் வெறியுடன்.” இத்தேர்தலானது “அமெரிக்காவில் அரசியலின் அடிநாதமாக இருக்கும் நிர்ணயங்கள் அத்துடன் உலகின் முதன்மைப்பெரும் சக்தியாக அமெரிக்காவின் பாத்திரம் இரண்டுக்குமே ஒரு சுத்தியல் அடியாக விழுந்திருக்கிறது.”

ஒபாமா தனது சுற்றுப்பயணத்தின் போது, நேட்டோவுக்குள் எத்தனை பெரிய மோதல்கள் இருந்தாலும் கூட, சோவியத்துக்குப் பிந்தைய காலகட்டத்தில் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தினால் வழங்கப்பட்டிருந்த அரசியல் கட்டமைப்பும் அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துடனான அமெரிக்காவின் கூட்டணியும் நின்றுநிலைக்கும் என்று ஐரோப்பிய ஆளும் உயரடுக்கிற்கு மீண்டும் உறுதியளிக்க முயற்சி செய்தார்.

ஏதென்ஸில் —இங்கு சிக்கன நடவடிக்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் மீது 5,000 கலகத் தடுப்புப் போலிசாரை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் நகரத்தின் மையப் பகுதிகள் மூடப்பட்ட நிலையில் இருந்தன— ஒபாமா ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு வரலாற்று சாதனையாகப் பாராட்டினார். சிரிசா (”தீவிர இடதுகளின் கூட்டணி”) அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுடனான சமூக வெட்டுகளையும், அமெரிக்காவின் மத்திய கிழக்கு போர்களுக்கு சிரிசா வழங்கிய தடவாள ஆதரவையும் அவர் புகழ்ந்தார். ட்ரம்புடன் பேசிவிட்டு வந்திருப்பதில், “நான் கூறக் கூடிய ஒரு செய்தி என்னவென்றால் நேட்டோவுக்கும் அட்லாண்டிக் கடந்த கூட்டணிக்கும் அவர் கொண்டிருக்கக் கூடிய கடப்பாடாகும்” என்று ஒபாமா தெரிவித்தார்.

பேர்லினில் — இங்கும் பெரும்பான்மையான பகுதிகளில் கடையடைப்பு இருந்தது—  அமெரிக்க-ஜேர்மன் உறவுகளை அமெரிக்க-ஐரோப்பிய கூட்டணியின் “மையக்கரு”வாக புகழும் ஒரு அறிக்கையை ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்கெல் உடன் இணைந்து ஒபாமா வழங்கினார். “சட்டத்தின் ஆட்சியின் கீழான ஒரு உயிர்த்துடிப்புள்ள ஜனநாயகம் மட்டுமே உத்தரவாதமளிக்கக் கூடிய தனிமனித சுதந்திரம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான நமது ஒன்றுபட்ட கடப்பாட்டின் அடிப்படையில்” அமெரிக்காவுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து இருக்கும் என்று அவர்கள் உறுதியளித்தனர்.

ட்ரம்ப் “அமெரிக்கா முதலில்” என்ற தேசியவாத வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கின்ற அதேநேரத்தில், ஐரோப்பாவுடன் உளப்பூர்வமான உறவுகளையும் பராமரிப்பார் என்பதான ஒபாமாவின் கணிப்புகள் மிகவும் கற்பனையுடனான சிந்தனை ஆகும்.

2008 பொறிவினால் தூண்டப்பட்ட பொருளாதார நெருக்கடியின் கீழ் உலகம் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்,  ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டுக் காட்டியதைப் போல, பிரதானமாக ஐரோப்பாவில் உள்ள தனது ஏகாதிபத்திய “கூட்டாளிகளின்” நலன்களை விலைகொடுத்து அமெரிக்க நிதிப் பிரபுத்துவத்திற்கு ஆதாயமான வகையில் உலக அரசியலுக்கு அதிரடியாக மறுவடிவம் கொடுப்பதற்கான முயற்சிகள் நிச்சயமாக மீண்டும் வரும்.

ட்ரம்ப்பின் தேர்வு ஒரு முக்கியமான திருப்புமுனையைக் குறிக்கிறது என்ற அதேவேளையில், அது ஆழமான-வேர் கொண்ட போக்குகளின் விளைபொருளுமாகும். இரண்டாம் உலகப் போரின் முடிவு முதலாக, அமெரிக்காவானது, இறுதி ஆய்வில், இருபதாம் நூற்றாண்டில் இரண்டு முறை உலகப் போராய் வெடித்த ஐரோப்பாவிற்குள்ளான குரோதங்களை ஸ்திரப்படுத்திய ஐரோப்பாவின் மேலாதிக்கமான சக்தியாக சேவை செய்திருந்தது. சோவியத் ஒன்றியத்துடனான அதன் பகைமையின் பாகமாக ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு ஒரு “ஜனநாயக” பிம்பத்தை முன்நீட்டும் பொருட்டு, பனிப்போர் காலத்தின் போது ஐரோப்பிய ஒருங்கிணைப்பு கொள்கைகளுக்கு அது நிதியாதாரம் அளித்தது, ஆதரவு செய்தது. ட்ரம்ப்பின் தேர்வானது, இந்த அரசியல் பொறியமைப்பிலான நிலைமுறிவில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது, “வரலாற்றின் முடிவை” குறிப்பதற்கெல்லாம் எட்டாத் தூரத்தில், உண்மையில் அது முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையின் ஒரு நெருக்கடியின் ஆரம்பகட்ட வெளிப்பாடாக மட்டுமே இருந்தது. முன்னினும் அதிக வன்முறையின் மூலமாக, உலகளாவிய மேலாதிக்க சக்தியாக தனது நிலையை இராணுவ வலிமையின் மூலமாகப் பராமரிப்பதற்கு முனைந்து வந்திருக்கின்ற, அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகால வீழ்ச்சியிலேயே இந்த நெருக்கடி மையம் கொண்டிருக்கிறது.

ஐரோப்பாவை பொறுத்தவரை, “அமெரிக்கா முதலில்” என்ற தேசியவாதத்திற்கு அமெரிக்கா திரும்புவது என்பதன் பொருள் அமெரிக்க அதிகாரத்தால் காப்புறுதி அளிக்கப்பட்டிருந்த போருக்குப் பிந்தைய அத்தனை ஸ்தாபகங்களும் முறிந்து விட்டன என்பதாகும். ஆயினும், ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே, ஐரோப்பிய சக்திகள், குறிப்பாக ஜேர்மனி, உலக அரங்கில் தங்களது சொந்த நலன்களை மூர்க்கமாக திட்டவட்டம் செய்வதன் மூலமாக இந்தப் போக்குகளுக்கு பதிலளிக்க தொடங்கி விட்டன.

வாஷிங்டனுடன் மோதல் தோன்றும் ஆபத்து என்ற பேயுருவானது, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளும் மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் தங்களது உரிமைகளை வெளிப்படுத்தத்தக்க பல்வேறு சர்வதேச ஸ்தாபனங்களுக்குள்ளுமான பிளவுகளை பிரம்மாண்டமான அளவுக்கு மோசமாக்குகிறது. 2010 இல், முதன்முதலில் யூரோ நெருக்கடி வெடித்த போது, அப்போது ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராக இருந்த ஜோன்-குளோட் திறிசே, ஐரோப்பா, முதலாம் அல்லது இரண்டாம் உலகப் போருக்கு முன்பிருந்ததைப் போன்றதொரு பதட்டநிலையில் இருப்பதாக எச்சரித்தார். அதன்பின்னர் இந்தக் கோடையில் — ஜேர்மனி தனது மீள்-இராணுவமயமாக்கல் முனைப்பை அறிவித்து, அமெரிக்காவில் இருந்து சுயாதீனமான வகையில் பெரும் இராணுவ நடவடிக்கைகளை தொடக்குவதற்கு தான் திறம்பெற்றதாகியே தீர வேண்டும் என்று வலியுறுத்தியதற்கு இரண்டு ஆண்டுகளின் பின்னர்—  பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு வாக்களித்தது.

அதேவேளையில், ட்ரம்ப்பின் தேர்வில் வெளிப்பாடு கண்டிருக்கும் அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடிக்கு நிகரானநிலை ஐரோப்பாவிலும் நிலவுகிறது. அமெரிக்காவில் ட்ரம்ப்பின் அதி-வலது ஆட்சி அமர்த்தப்படுவதானது ஐரோப்பாவிற்குள்ளாக, பிரான்சின் தேசிய முன்னணி (FN) தொடங்கி ஜேர்மனிக்கான மாற்று (AfD) வரையிலும், வலது-சாரி, தேசியவாத மற்றும் பாசிசப் போக்குகளுக்கு வலுவூட்ட இருக்கிறது. ஐரோப்பாவில் அதிவலது அரசாங்கங்கள் அதிகாரத்துக்கு வரக் கூடிய சாத்தியம் பெருமளவில் அதிகரிக்கிறது.

ட்ரம்ப்பின் தேர்வானது அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை ஆகும். ஆளும் வர்க்கங்கள் இருபதாம் நூற்றாண்டு பாசிசத்தின் பாரம்பரியத்தைத் திரும்பிப் பார்த்து, இராணுவவாதத்தையும், உலகப் போர் முனைப்பையும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான போலிஸ் ஒடுக்குமுறை ஆகியவற்றையும் இன்னும் தீவிரப்படுத்துவதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன.

தேசியவாதத்தையும் போரையும் நோக்கிய அபாயகரமான போக்குகள் உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் நீடித்த நெருக்கடியில் வேர்கொண்டிருப்பவை ஆகும். ஆனாலும் 20 ஆம் நூற்றாண்டில் போலவே, அதே போக்குகளே சோசலிசப் புரட்சிக்கான நிலைமைகளையும் உருவாக்குகின்றன. வரவிருக்கும் போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்தின் பணி, அரசியல்ரீதியாக அணிதிரள்வதும், ஒரு சுயாதீனமான, புரட்சிகர மற்றும் சோசாலிச முன்னோக்கைக் கொண்டு தன்னை ஆயுதபாணியாக்கிக் கொள்வதும் ஆகும்.