ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

இலங்கை: ஏகாதிபத்தியம் மற்றும் தமிழ் தேசியவாதம் பற்றி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினர் உரையாடினர்

By our correspondent 
15 November 2016

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் யாழ்ப்பாணத்தில் நடக்கவுள்ள பகிரங்க கூட்டமொன்றுக்காக யாழ் பல்கலைக்கழகத்துக்குள் பிரச்சாரமொன்றை முன்னெடுத்தன. "ஏகாதிபத்திய போரும் தமிழ் தேசியவாதமும் சோசலிசத்திற்கான போராட்டமும்" என்ற தலைப்பிலான இந்த கூட்டம் நவம்பர் 20 அன்று யாழ்ப்பாண நூலக உணவக மண்டபத்தில் நடக்கவுள்ளது.

பிரச்சாரகர்கள் கூட்டம் சம்பந்தமாக உலக சோசலிச வலைத் தளத்தில் வெளிவந்த செய்தியின் பிரதிகளையும் மேலும் கட்டுரைகளையும் விநியோகித்ததோடு புத்தக விற்பனை ஒன்றையும் நடத்தினர். கலந்துரையாடல்களில் பங்குபற்றியவர்கள் பிரதானமாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாகவும் யாழ்ப்பாணத்தில் தற்போது மேலோங்கி வரும் சமூக நிலைமைகள் தொடர்பாகவும் பேசினர்.

மாணவிகள் ட்ரொட்ஸ்கிச இலக்கியங்களை வாங்குகின்றனர்

தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் தேசியவாத கட்சிகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் அதேவேளை, மத்திய கிழக்கில் அதன் ஆக்கிரமிப்பு போர்களுக்கும் சீனா மற்றும் ரஷ்யா மீதான போர் ஆத்திரமூட்டல்களுக்கும் ஆதரவு கொடுக்கின்றன.

பெருநிறுவனங்களுக்கு வரிகளை நீக்குவதற்கும், கட்டுப்பாடுகளை அகற்றுவதற்கும், சமூகநல வேலைத்திட்டங்களை வெட்டுவதற்கும், தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதற்கும், இராணுவத்தை பரந்த அளவில் விரிவுபடுத்துவதற்கும் அத்துடன் ஜனநாயக உரிமைகளில் எஞ்சியிருப்பதை அழிப்பதற்கும் உறுதிகொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து டொனால்ட் ட்ராம்ப்பின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் எனவும், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்பின் ஒத்துழைப்புடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் எனவும்” திமிர்த்தனமாக குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தனின் கருத்துக்கு நேரெதிராக, சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.இ. உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களில் பலர் அமெரிக்க தேர்தல் தொடர்பாக தமது கவலைகளை தெரிவித்தனர். “அமெரிக்கா இலங்கையில் சிறுபான்மை தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையிட்டு கவலைகொள்ளப் போவதில்லை, அது தனது சொந்த நலன்களுக்கு மட்டுமே இலங்கையைப் பயன்படுத்திக்கொள்ளும்” என பலர் கருத்து தெரிவித்தனர். வட மாகாண சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி செய்யத் தொடங்கியதில் இருந்து அடிப்படையான மாற்றங்கள் எதனையும் காணவில்லை எனவும் குறிப்பிட்டனர்.

போர் முடிவடைந்து ஏழு ஆண்டுகளின் பின்னரும் வடக்கு இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் அதேவேளை, அக்டோபர் 20 இரவு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்களான பவுண்ராஜ் சுலக்ஷன் மற்றும் நடராசா கஜனும் பொலிசாரினால் சுட்டுக் கொல்லப்பட்டதையிட்டு, மாணவர்கள் மத்தியில் பதட்டமும் கோபமும் நிலவிவருகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் தேசியவாத கட்சிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சில விரிவுரையாளர்களும், பல்கலைக்கழ மாணவர்களின் ஒன்றிய தலைவர்களும், இந்த கொலைகளில் அரசாங்கத்தின் பொறுப்பை மூடி மறைத்து, குற்றத்திற்கான பொறுப்பை பொலிசார் மீது திருப்பிவிட செயற்பட்டனர். பல்கலைக்கழகத்துக்குள் தமிழ் தேசியவாத அரசியல் செல்வாக்குச் செலுத்த முயலும் அதேவேளை, இராணுவத்தாலும் யாழ் பல்கலைக்கழகம் பல தசாப்தங்களாக இலக்குவைக்கப்பட்டுள்ளது.

உலக சோசலிச வலைத் தளத்தைப் பற்றி தான் முன்னர் அறிந்திருக்கவில்லை எனக் கூறிய கலைப்பீட மாணவி ஒருவர், வட மாகாணத்தில் ஊழல் மற்றும் மோசடி மலிந்து கிடக்கும் போது, நீங்கள் எப்படி உலகத்தை மாற்றுவீர்கள் எனக் கேட்டார். இந்த சமூக அமைப்பே இலாபத்தை நோக்கை அடிப்படையாகக் கொண்டது, இந்த முதலாளித்துவ அமைப்பு முறைக்கு முடிவு கட்டுவதன் மூலமே ஊழல் மற்றும் மோசடிகளுக்கு முடிவு கட்ட முடியும் என எமது நிருபர்கள் விளக்கிய போது, அதற்கு கவனமாக செவிமடுத்த அவர், இனவாத போரின் விளைவுகளைப் பற்றி பேசினார். “விடுதலைப் புலிகள் போராட்டத்துக்கு வாருங்கள் என்று அழைத்தனர், இன்று இந்த யுத்தம் படுகொலைகளையும் ஊனமுற்றவர்களையும் உருவாக்கிவிட்டுள்ளது. இன்று நாம் எதையும் பெறவில்லை. அனைவரும் சுயநலவாதிகளே. எல்லா துன்பங்களையும் நேரடியாக பார்த்துவிட்டோம். இப்போது பல்கலைக்கழகத்துக்குள் சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களுக்கு மத்தியில் (இராணுவத்தினர்) மோதல்களைத் தூண்டிவிடுகின்றனர். இப்போது இரு மாணவர்களை பொலிசார் சுட்டுக் கொன்றுவிட்டனர்.”

“நீங்கள் உலகத்தை ஐக்கியப்படுத்த வேண்டும் எனக் கூறுகிறீர்கள், ஆனால் போர் முடிவுக்கு வந்த முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்ட போது உலகம் பார்த்துக்கொண்டுதானே இருந்தது?” என அவர் மேலும் வினவினார். சோ.ச.க., ஐ.வை.எஸ்.எஸ்.இ. மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் உலகம் முழுவதும் தொழிலாளர், ஒடுக்கப்பட்ட மக்களை ஐக்கியப்படுத்துவதற்கே போராடுகின்றனர். ஆனால் புலிகள் உட்பட தமிழ் பிரிவினைவாதிகள் எப்போதும் இந்த முன்நோக்குக்கு எதிராக இருந்ததோடு, அவர்கள் ஒரு காலமும் தங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழ், சிங்கள அல்லது சர்வதேச தொழிலாள வர்க்கத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை. மாறாக அவர்கள் ஏகாதிபத்தியத்துக்கே வேண்டுகோள் விடுத்தனர். ஏகாதிபத்தியம் தனது நலன்களுக்கு ஏற்பவே செயற்பட்டது, என விளக்கிய போது, அவர் தொடர்ந்தும் வலைத் தளத்தை வாசிக்கவும், கூட்டத்தில் பங்குபற்றவும் உடன்படுவதாக தெரிவித்தார்.

அமெரிக்க தேர்தல் பற்றிய செய்தி ஒன்றை பத்திரிகையில் வாசித்துக்கொண்டிருந்த அலுவலக உதவியாளர் ஒருவர் கூறுகையில்: “பொழுபோக்காகவே அமெரிக்க தேர்தல்களை பற்றி வாசித்து வந்துள்ளேன். ஆனால் எங்களுக்கு அதில் ஒன்றும் பிரயோசனம் இல்லை என்று நினைத்தேன். நீங்கள் விளக்கியது போன்று, சீனாவுக்கு எதிராக நடக்கும் போர் தயாரிப்புகள் மற்றும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் போன்றவை இந்த பிராந்தியத்தில் ஒரு பெரும் ஆபத்தை முன்கொண்டுவந்துள்ளது புரிகின்றது. இது பற்றி வேறு எவரும் தெளிவுபடுத்தியதில்லை,” என்றார்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களில் ஒருவர் பேசும் போது: “குடியரசுக் கட்சியை விட ஜனநயாகக் கட்சி பரவாயில்லை தானே? குடியரசுக் கட்சி கடும்போக்கானது. ஒபாமாவை விட மற்றவர் (ட்ரம்ப்) கடும் போக்குடையவர் தானே? இரண்டு கட்சிகளை விட்டால் அமெரிக்க மக்களுக்கு வேறு தெரிவுகளும் இல்லையே?” என்றார்.

நீண்ட கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவித்த அவர், “நீங்கள் சொல்வது போல், ஹிலாரி கிளின்டனின் திட்டமிடலில் ஏற்கனவே ஒரு போர் நடந்து கொண்டிருக்கின்றது. மாற்றம் வராது என்று கூற முடியாது. முதலாளித்துவம் நெருக்கடிக்குள் செல்லும் போது மாற்றுத் தெரிவு இல்லாமல் எல்லோரும் இதற்குள் அடைபட்டுள்ளனர். ஆனால் அந்த தெரிவு கிடைக்கும்போது அனைவரும் அதை ஏற்றுக்கொள்வர் என நான் நினைக்கின்றேன்,” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர், இலங்கையில் ஒழுங்கான சோசலிச அமைப்பு கிடையாது. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் ஏனைய அமைப்புகளை எடுத்துக்கொண்டாலும் முதலில் சோசலிசம் பேசி, பின்னர் மாறிக்கொண்டனர். சோசலிஸ்டுகள் எனக் கூறிக்கொண்ட தமிழ் அமைப்புகளும் அவ்வாறுதான். நீங்கள் விளக்கியது போல், ஜே.வி.பி. போன்ற பேரினவாத அமைப்புகளை முதலாளித்துவ ஊடகங்கள் சோசலிச கட்சிகளாக மிகைப்படுத்திவிட்டன. முதலாளித்துவ ஊடகங்கள் உண்மையான சோசலிச இயக்கங்களைப் பற்றி எழுதுவதில்லைதானே,” என்றார்.

“2013ல் வடமாகாண சபை தேர்தலுக்குப் பின்னர் அடிப்படை மாற்றங்கள் எதையும் நாம் காணவில்லை. இராணுவம் ஆக்கிரமித்திருந்த மக்களுக்கு சொந்தமான காணிகள் சிலவற்றை விடுவித்துள்ளனர். அவ்வளவுதான். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு தருவதாக கூறி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் அதைப் பற்றி எதையும் கண்ணில் காட்டவில்லை. அரசாங்கம் விலைவாசியை அதிகரிப்பது பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமைதியாகவே இருக்கின்றது. அது அரசாங்கத்தின் எதிர்க் கட்சியாகவே செயற்படுகின்றது.” என அவர்கள் மேலும் கூறினர்.

உலகப் போர் தயாரிப்புகளுக்கு எதிராக ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதை தாம் கண்டிப்பாக வரவேற்பதாகத் தெரிவித்த ஊழியர்கள், ஆயிரம் ரூபாய் நாள் சம்பளம் கோரி நீண்ட போரட்டத்தில் ஈடுபட்டுள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி எத்தகைய ஆதரவை வழங்குகின்றது என்பது பற்றி விசேடமாக கேட்டுத் தெரிந்துகொண்டனர்.

முகாமைத்துவ மாணவர் குழுவினரிடம் ஆட்சி மாற்றத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டுள்ளனவா என கேட்டபோது அவர்கள் சந்தேகத்துடன் பதிலளித்தனர். “சமூகத்தில் கேவலமான மாற்றங்கள் தான் வரும்போல் தெரிகிறது. நல்ல மாற்றங்கள் எதுவும் வரவில்லை. எனக்கு தெரிந்தளவில் வட மாகாண சபையால் எந்த பிரயோசனமும் இல்லை.” என ஒரு மாணவர் கூறினார். “மாணவர்களை பொலிஸ் படுகொலை செய்திருந்தாலும் அதற்கு அரசாங்கம் முழு பொறுப்பு. அரசாங்கம் பதில் சொல்லாமல் போக முடியாது. பொலிசை இயக்குவது அரசாங்கம்தானே.” என இன்னொரு மாணவர் சீற்றத்துடன் கூறினார்.

சர்வதேச சமூகத்தின் (அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்) தலையீட்டுடன் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏனைய தமிழ் தேசியவாதிகளும் கூறுவதைப் பற்றி கேட்டபோது, அத்தகைய ஒரு வாய்ப்பு குறைவுதான் என ஒரு மாணவர் கூறினார். “அவர்கள் எமது நாட்டை ஒரு நாடாகவே பார்க்கவில்லை. அவர்கள் இருக்கின்ற வளங்களை சுரண்டுவார்கள். தங்கள் நலன்களுக்கு பயன்படுத்திக்கொள்வர். இது ஒரு நாடு இங்கு ஒரு மக்கள் வாழ்கின்றனர் இவர்களுக்கு தீர்வு கொடுக்க வேண்டும் என்ற தேவை அவர்களுக்கு இருக்கப் போவதில்லை. டிசம்பர் 1ம் திகதி மாணவர்கள் கொல்லப்பட்டமைக்கு நியாயம் கிடைக்காவிட்டால் மீண்டும் நாங்கள் வீதிக்கு இறங்கி போராட வேண்டிய நிலை வரும்.”

இன்னொரு மாணவன் பேசும் போது, “அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடே இந்தக் கொலைகளாகும்” என்றார். “அரசாங்கத்தினை பாதுகாக்கவே கட்சிகளும் அமைப்புக்களும் செயற்படுகின்றன. அரசாங்கத்தின் உத்தரவில்லாமல் பொலிசார் இந்தக் கொலைகளை செய்திருக்க முடியாது. மட்டுப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ்-இராணுவக் கெடுபிடிகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. இதற்கு அரசாங்கமும் தமிழ் கட்சிகளும் முழுப் பொறுப்பாகும்,” என அவர் மேலும் கூறினார்.

மாணவன் நிஷாத்: “அமெரிக்கா உலகம் பூராவும் யுத்தம் நடத்துவதை நாங்கள் எதிர்க்கின்றோம். அமெரிக்காவுக்கு மக்களைக் கொல்வதற்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. மூன்றாம் உலக யுத்தம், அதாவது ஒரு அணுவாயுத யுத்தம் நடத்தப்பட்டால் பேரழிவுதான் ஏற்படும். அமெரிக்க தேர்தலில் ட்ரம்பை விட கிலாரி நல்லவர் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் உங்களுடன் கலந்துரையாடிய பின்னர் இருண்டு பேரும் ஒன்றுதான் என்பதை என்னால் உணர முடிகின்றது. இருவரில் யார் வெற்றி பெற்றாலும் யுத்தம் வரும் என்பதை என்னால் உணரமுடிந்துள்ளது.”

கலைப்பீட மாணவர் ஒருவர் கலந்துரையாடலில் இணைந்துகொண்ட போது, “அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களுக்கும் இடையில் வேறுபாடு எதுவுமே இல்லை. இருவருமே சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்,” என்றார். “இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் உலகத்தில் அமைதி ஏற்படப்போவதில்லை மாறாக யுத்த ஆபத்து தீவிரமடையப் போகின்றது என்பதையே இவர்களது நிலைப்பாடு தெளிவுபடுத்துகின்றது” என்றார். பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டமை சம்பந்தமாக கருத்து தெரிவிக்கையில், “எங்களது போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் வாக்குறுதிக்கமைய, எங்களுக்கு நியாயம் கிடைக்காதுவிடின் நாம் தொடர்ந்து போராடுவோம்” என்றார்.

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்கவுள்ள கூட்டத்துக்கு வருகை தந்து, அமெரிக்க தேர்தலின் பின்னரான அபிவிருத்திகள் சம்பந்தமாகவும் தமிழ் தேசியவாதத்துக்கும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான சோசலிச வேலைத் திட்டம் சம்பந்தமாக கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு நாம் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

திகதி: நவம்பர் 20, ஞாயிற்றுக் கிழமை, மாலை 3.30 மணி

இடம்: யாழ்ப்பாண பொது நூலக உணவக மண்டபம்