ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Death toll rises to 25, as India-Pakistan border clashes heighten war danger

இந்தியா-பாகிஸ்தான் எல்லை மோதல் போர் அபாயத்தை அதிகரிக்கையில், உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக அதிகரிக்கிறது

By Alex Lantier
2 November 2016

சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான கடந்த ஐந்து நாள் எல்லை-தாண்டிய கடுமையான பீரங்கி குண்டுவீச்சுக்கள் மற்றும் எந்திர துப்பாக்கிச்சண்டையில் குறைந்தபட்சம் 25 பேர், அவர்களில் பெரும் பெரும்பான்மையினர் அப்பாவி மக்கள், கொல்லப்பட்டுள்ளனர்.

இந்திய மற்றும் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரைப் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியைத் தாண்டிய பாகிஸ்தானிய குண்டுவீச்சுக்களில், இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீரின் ராம்கார்ஹ் பகுதியில், மூன்று பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் ஏழு பேர் பலியானதாக நேற்று இந்திய பொலிஸ் குறிப்பிட்டது.

இதைத் தொடர்ந்து திங்களன்று இந்தியாவின் ஒரு சிப்பாய் மற்றும் படைத்துறைசாரா நபர் ஒருவரும், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள அஜாத் காஷ்மீரின் நக்யால் மற்றும் ஜன்ட்ரோட் பகுதியில் ஆறு பாகிஸ்தானியர்களும் கொல்லப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையன்று நடந்த எல்லைக் கடந்த தாக்குதல்கள், இந்திய பாதுகாப்பு படைகளின் இரண்டு அங்கத்தவர்கள் மற்றும் ஆறு பாகிஸ்தானிய குடிமக்களின் உயிர்களைப் பறித்தது.

ஊரி இந்திய இராணுவ தளம் மீதான செப்டம்பர் 18 தாக்குதலுக்கு இந்தியா பாகிஸ்தானை குறைகூறியதும் கட்டவிழ்ந்த இந்த எல்லை மோதல்கள், தெற்காசியாவின் போட்டி அணுஆயுத நாடுகளுக்கு இடையே முழு அளவிலான போரைத் தூண்ட அச்சுறுத்துகின்றன.

“இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஒரு முழு-அளவிலான போர் நடந்து வருவதைப் போல தெரிகிறது. தயவு செய்து கருணை கூர்ந்து அதை நிறுத்துங்கள்,” என்று ஒரு கிராமவாசியான மொஹம்மத் சைய்த் தொலைபேசியில் ராய்டர்ஸ்க்குத் தெரிவித்தார், இந்த பேட்டி இடையிலேயே துப்பாக்கி குண்டு சத்தத்தால் தடைபட்டது. இந்திய நிர்வாகத்தில் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் இல் நூற்றுக் கணக்கான பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன, போர் மீதான கோபம் மற்றும் அச்சம் எல்லைக்கு இருபக்கமும் உள்ள மக்களிடையே அதிகரித்து வருகிறது.

இருந்தாலும் இருதரப்பில் இருந்தும் இந்திய மற்றும் பாகிஸ்தானிய இராணுவ தளபதிகள் சண்டையை தீவிரப்படுத்த சூளுரைத்துள்ளனர். “தூண்டுதலற்ற எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு தாக்குதலில் அப்பாவி மக்களை இந்தியா இலக்கில் வைத்திருப்பதற்கு" பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானிய படைகள் "கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்த இந்திய சாவடிகளைத் துல்லியமாக இலக்கில் வைத்திருப்பதாக" அறிவிக்கும் ஓர் அறிக்கையை பாகிஸ்தானிய இராணுவத்தின் முப்படைகளது பொதுத்தொடர்பு அலுவலகம் திங்களன்று மாலை வெளியிட்டது.

இந்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் Asian News International க்குத் தெரிவிக்கையில், “அவர்கள் எங்களது முன்பகுதிகளை இலக்கில் கொண்டுள்ளனர், நாங்களும் அதற்கேற்ற விதத்தில் பதிலடி கொடுத்துள்ளோம். அவர்கள் 120 மிமீ ஆயுதங்களை, அதாவது கனரக மற்றும் சிறுகுழல் பீரங்கிகளைப் பயன்படுத்தி வருகின்றனர், நாங்களும் அதே விதத்தில் விடையிறுத்து வருகிறோம்… நாங்கள் அவர்களைக் கடுமையாக தாக்கி வருகிறோம்,” என்றனர்.

இந்திய எல்லை பாதுகாப்பு படை (BSF) துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் தர்மேந்திர பரீக், BSF நேற்று நடத்திய ஒரு "துல்லிய பதிலடி" என்று அவர் குறிப்பிடும் நடவடிக்கையைப் பாராட்டியதுடன், அப்படைகள் "அதே பகுதியில் IB ஐ [சர்வதேச எல்லையை] கடந்து பாகிஸ்தானிய எல்லைக் கட்டுப்பட்டு சிப்பாய்களது சாவடிகளை இலக்கில் வைத்தனர் மற்றும் 14 பாகிஸ்தானிய சாவடிகளுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தினர்,” என்றார்.

ஊரி தாக்குதலுக்கு ஆறு வாரங்களுக்குப் பின்னர், இந்திய இராணுவ முகாம் மீதான அத்தாக்குதல் ஒரு மோதலைத் தீவிரப்படுத்துவதற்கு மட்டுமே சேவையாற்றுகிறது என்பது தெளிவாகிறது, இதன் விளைவுகள் இன்னும் அதிக ஆழமாக வேரூன்றியுள்ளன.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு அங்கால் உள்ள இருதரப்பு அதிகாரிகளுமே அதிகரித்து வரும் சமூக கோபத்தை ஒடுக்க மற்றும் தொழிலாளர்களை தேசிய மற்றும் வகுப்புவாத அணிகளாக பிளவுபடுத்த, அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவினது சீன-விரோத "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பால்" உந்தப்பட்ட ஒரு பதட்டமான சர்வதேச இராணுவ தீவிரப்பாட்டின் பாகமாக, தேசியவாதம் மற்றும் போர் காய்ச்சலைத் தூண்டிவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக வலதுசாரி பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) சிக்கன நடவடிக்கைகள் மற்றும் வணிக-சார்பு சந்தை சீர்திருத்தங்களுக்கு எதிராக பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களது போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் உட்பட, இந்தியா, சமூக போராட்டங்களால் அதிர்ந்து போயுள்ளது.

பாரிய காஷ்மீர் போராட்டங்களை இந்திய பாதுகாப்பு படைகள் இரத்தந்தோய்ந்த விதத்தில் ஒடுக்குவதில் இருந்து கவனத்தை திசைதிருப்பவும் மற்றும் அதை நியாயப்படுத்தவும் ஊரி முகாம் தாக்குதல் புது டெல்லியால் கைப்பற்றப்பட்டது. இந்தியாவின் இந்து மேலாதிக்கவாத பிஜேபி அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்தமாக இந்திய ஸ்தாபகத்தையே கதிகலங்க செய்துள்ள இந்த போராட்டங்கள், காஷ்மீர் சுதந்திரத்திற்கு அழைப்புவிடுத்த ஒரு இஸ்லாமிய போராளி பர்ஹானி வாலி இந்திய பாதுகாப்பு படைகளால் நீதி விசாரணையின்றி கொல்லப்பட்டதற்குப் பின்னர் ஜூலையில் வெடித்தெழுந்தன.

காஷ்மீர் படுகையில் இந்திய-எதிர்ப்பு போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறையில் 80 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான பொலிஸ் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

போராட்டக்காரர்கள் கற்கள் வீசியதற்கான விடையிறுப்பாக கூறப்படும் ஒரு நடவடிக்கையில் தென் மாவட்டமான புல்வாமாவில் பாதுகாப்பு படைகள் பெல்லட் துப்பாக்கிகளை (pellet guns) கொண்டு சுட்டதில், நேற்று 13, 16 மற்றும் 18 வயதான மூன்று பெண்கள், அவர்களது முகம், காது மற்றும் கண்களில் காயங்களோடு ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கவில்லையென அவர்களது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர்களது பார்வைத் திறன், அவர்களது செவித்திறன் மற்றும் அவர்களது பேச்சுத்திறனை மீட்டமைக்கும் ஒரு பெரும்பிரயத்தன முயற்சியில் அவர்கள் மூவருமே வாரக்கணக்கில் வலி நிறைந்த அறுவை சிகிச்சைகளை முகங்கொடுத்தனர்.

இச்சூழலில், மற்றும் வாஷிங்டனின் ஆதரவுடனும், இந்திய அரசாங்கம் ஊரி இராணுவ தளம் மீதான தாக்குதலுக்கு முன்நடத்திராத நடவடிக்கைகளைக் கொண்டு விடையிறுத்தது. சிந்து நதிநீர் உடன்படிக்கையைக் கைவிட அச்சுறுத்தியமை மற்றும் பாகிஸ்தானுக்குள் அதன் சிறப்பு படைப் பிரிவு துருப்புகளது நடவடிக்கைகள் மூலமாக கடுமையான பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டதாக ஊக்குவித்தமை ஆகியவையும் இதில் உள்ளடங்கும்.

பாகிஸ்தானுக்குள் நடத்தப்பட்ட எந்தவொரு இராணுவ நடவடிக்கைகள் பற்றிய அறிக்கைகளும், சங்கிலித் தொடர் போல கிளர்ச்சிகளை மற்றும் எதிர்கிளர்ச்சிகளைத் தூண்டி, அவை முழு அளவிலான போருக்குள் தீவிரப்படுத்தும் என்று அஞ்சி, நான்குக்கும் அதிகமான தசாப்தங்களாக, புது டெல்லி அது போன்ற எந்தவொரு நடவடிக்கைகளையும் பாகிஸ்தானுக்குள் நடத்தியதாக ஒப்புக் கொண்டதில்லை. இப்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டுமே அணுஆயுதங்களை பெற்று அண்மித்து இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர், “மூலோபாய கட்டுப்பாடுகளின்" நாட்கள் முடிந்துவிட்டதாகவும், அவசியமானால், பாகிஸ்தான் "பயங்கரவாதத்தை" நிறுத்திக் கொள்ள வேண்டுமென்ற அதன் கோரிக்கையை வற்புறுத்த அது போர் நடத்துமென்றும் இந்தியா அறிவித்துள்ளது—வேண்டுமென்றே மோதலைத் தூண்டும் இந்நடவடிக்கையானது மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வை பறிக்கும் ஓர் அணுஆயுத பரிவர்த்தனையாக இறுதியில் மாறக்கூடியதாகும்.

கடந்த ஆண்டு, இந்தியாவுடன் அமெரிக்க அதிகாரிகள் கையெழுத்திட்ட இராணுவ உடன்படிக்கைகள், சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாக மாற்றியது. இந்திய துணைகண்டம் மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் பிரதான கூட்டாளியான பாகிஸ்தானுக்கும் மற்றும் இந்தியாவுக்கும் இடையே பெரிய போர் ஒன்று ஏற்பட்டால், அது அமெரிக்கா மற்றும் சீனா இரண்டையும் ஓர் உலகளாவிய மோதலுக்குள் உள்ளிழுக்கும் என்று அனுமானிக்க வேண்டியுள்ளது.

எல்லை பகுதியில் தீவிரமடைந்து வரும் மக்களின் போருக்கு எதிரான எதிர்ப்புக்கு இடையிலும், காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு தலைமை தாங்கும் அதிகாரிகள் மோதலை தீவிரப்படுத்துவதை தள்ளிப் போட வேண்டாமென புது டெல்லியை நிர்பந்திக்க உணர்கிறார்கள் என்பதால் இந்த அபாயம் மிகவும் நெருக்கத்தில் இருக்கும் ஒன்றாக மாறியுள்ளது. நேற்று ஜம்மு மற்றும் காஷ்மீர் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டுமென இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அழைப்புவிடுத்தார்.

“இப்பிராந்தியத்தில் நிலவும் விரோதம் மற்றும் வன்முறையாலும், அதன் அபாயங்கள் மற்றும் கடுமையான விளைவுகளைக் குறித்தும் நாங்கள் நன்கறிவோம் என்பதாலும் அளப்பரிய துயரில் பாதிக்கப்பட்டிருக்கும் ஜம்மு&காஷ்மீரில் உள்ள நாங்கள் சமாதானத்திற்காக ஏங்குகிறோம்,” என்றார். அவர் கூறுகையில், “ஒருசமயம் மிகவும் செல்வச்செழிப்பாக இருந்த நாடுகளை போர்கள் எவ்வாறு முற்றிலுமாக நாசமாக்கியுள்ளன, கலாச்சாரங்களை எவ்வாறு நிர்மூலமாக்கி உள்ளன என்பதை நாம் உலகெங்கிலும் பார்க்கிறோம்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

எவ்வாறிருப்பினும் இந்திய ஆளும் உயரடுக்கின் சக்தி வாய்ந்த கன்னைகள், எல்லா அரசியல் வண்ணத்தில் இருப்பவையும், இந்த இராணுவ தீவிரப்பாட்டை ஆதரித்துள்ளன. செப்டம்பரில் ஸ்ராலினிச தலைமையிலான மாநில அரசாங்கத்தின் ஒரு நடவடிக்கையாக தென்னிந்திய மாநிலமான கேரளா சட்டமன்றம், ஆத்திரமூட்டும் வகையில் பாகிஸ்தானுக்குள் இந்திய இராணுவத்தின் "துல்லிய தாக்குதல்களை" ஆமோதித்தது. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ அங்கத்தவரும் முதலமைச்சருமான பினராயி விஜயன் அத்தீர்மானத்தை நிறைவேற்றிய போது, “நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற இராணுவம் எடுத்த நடவடிக்கைகளை சட்டமன்றம் பாராட்டுகிறது, அதன் நடவடிக்கைகளை முழுமையாக ஆதரிக்கிறது,” என்றார்.

பிஜேபி அரசாங்கமும் மற்றும் இந்திய உயரடுக்கும் அவற்றினது பாகிஸ்தானுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களின் பிரச்சாரத்தை ஒன்றோடொன்று இணைந்த இரண்டு கணக்கீடுகளின் அடிப்பிடையில் தீவிரப்படுத்தி வருகின்றன: ஒன்று, அமெரிக்கா உடனான அவற்றின் முன்பினும் நெருக்கமான மூலோபாய பங்காண்மை இஸ்லாமாபாத் மீது அவர்களுக்குப் புதிய நெம்புதிறனை வழங்குகிறது, மற்றது, இந்தோ-அமெரிக்க கூட்டணி உருவானதற்கு பாகிஸ்தானும் சீனாவும் அவற்றின் சொந்த மூலோபாய உறவுகளை அதிகரித்ததன் மூலமாக விடையிறுத்துள்ளன என்ற கவலையால் ஆகும்.

அக்கணக்கீடுகள் ஏமாற்றத்திற்கு உள்ளாகவில்லை. ஒரு பொறுப்பற்ற நகர்வில், ஒபாமா நிர்வாகமும் அமெரிக்க அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகமும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆக்ரோஷத்தை பின்தொடர்வது மீது இந்தியாவை ஆதரிப்பதில், இதுபோன்ற கடந்த கால நெருக்கடிகளில் ஆதரித்ததை விட இன்னும் கூடுதலாக ஆதரிக்க தயாராக இருப்பதை முன்பினும் தெளிவாக புது டெல்லிக்கு சமிக்ஞை செய்துள்ளன.

அதன் வடமேற்கு அண்டைநாடான ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஈடுபாடு மற்றும் அமெரிக்க, ஆப்கான், இந்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையின் அறிவிப்பு ஆகியவை குறித்த இஸ்லாமாபாத்தின் கவலைகளை உதறித் தள்ளியமையும் இதில் உள்ளடங்கும். இந்திய-ஆப்கான் வர்த்தகம் மீது பாகிஸ்தானின் தடைகளை உடைக்கும் மற்றும் ஒரு வர்த்தக பாதையை ஏற்படுத்துவதன் மூலமாக மத்திய ஆசியாவில் ஆதாரவளங்கள் மற்றும் செல்வாக்கிற்கு சீனாவுடன் மூலோபாயரீதியில் போட்டியிடும் இந்திய திட்டத்திற்கு வாஷிங்டனின் எச்சரிக்கையுடன், மறைமுகமான ஆதரவையும் இது கண்டுள்ளது, அதுவும் அமெரிக்கா அதன் ஒரு பிரதான பிராந்திய போட்டியாளராக மற்றும் சிரியாவில் அதன் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய தடையாக பார்க்கும் ஒரு நாடான ஈரானில் அமைந்துள்ள சபஹார் (Chabahar) துறைமுகமே இத்திட்டத்தின் முன்னிலையில் உள்ளது என்றபோதும் அது ஆதரவளித்துள்ளது.

ஊரி தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக செப்டம்பரில் முன்னணி அமெரிக்க பத்திரிகைகள் அவற்றின் ஆதரவை எடுத்துரைத்திருந்தன. “உலகின் மிகப் பெரிய இராணுவங்களில் ஒன்றை இந்தியா கொண்டுள்ளது, ஏன் அதை பயன்படுத்துவதில்லை?” என்று தலைப்பிட்ட அதுபோன்றவொரு கட்டுரை ஒன்று லோஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இல் வெளியானது.

அதன் அனுதாபங்கள் இஸ்லாமாபாத்திற்கு எதிராக புது டெல்லியுடன் இருப்பதாக ஒபாமா நிர்வாகம் நேரடியாகவே கடந்த மாதம் குறிப்பிட்டது. அது “எச்சரிக்கையை" வலியுறுத்தினாலும், “எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இராணுவரீதியில் விடையிறுக்க அவசியப்படும் இந்திய நிலைமையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்" என்று அறிவித்து, அது பாகிஸ்தானுக்குள் பிஜேபி அரசாங்கம் நடத்திய சட்டவிரோத மற்றும் பெரிதும் ஆத்திரமூட்டும் தாக்குதல்களுக்கு ஆதரவாக நிற்கிறது.