ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US-Russian war tensions mount over Eastern Europe and Syria

கிழக்கு ஐரோப்பா மற்றும் சிரியா மீதான அமெரிக்க-ரஷ்ய போர் பதட்டங்கள் அதிகரிக்கின்றன

By Bill Van Auken
27 October 2016

ரஷ்ய எல்லைக்குத் தாக்கும் தூரத்தில் சுமார் 4,000 போர் துருப்புக்களை நான்கு படைக்குழுக்களாக ஒழுங்கமைத்து நிலைநிறுத்துவதற்கான இறுதி திட்டங்களை முடிவு செய்ய, புதனன்று புரூசெல்ஸ் இல் நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் இரண்டு நாள் கூட்டம் ஒன்றை கூட்டியிருந்தனர்.

இந்த முன்-அணிவரிசை படைகள், ஒருசில நாட்களுக்குள் போர்களத்திற்குள் நுழைய தகைமை கொண்ட 40,000 பலமான விரைவு எதிர்நடவடிக்கை படைகளால் ஆதரிக்கப்பட இருக்கின்றன.

இத்திட்டம் அமெரிக்கா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கு இடையே பனிப்போர் உச்சமடைந்ததற்கு பின்னர் அப்பிராந்தியத்தின் மிகப் பெரிய இராணுவ தீவிரப்பாட்டைப் பிரதிநிதித்துவம் செய்வதுடன், உலகின் இரண்டு மிகப்பெரிய அணுஆயுத சக்திகளான வாஷிங்டன் மற்றும் மாஸ்கோவிற்கு இடையே ஓர் ஆயுத மோதலின் உச்சபட்ச அச்சுறுத்தலையும் அதனுடன் கொண்டு வருகிறது.

புதன்கிழமை அமர்வின் முடிவில் நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் உறுதிப்படுத்துகையில், அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி மற்றும் கனடா முறையே போலாந்தில் மற்றும் மூன்று முன்னாள் சோவியத் பால்டிக் குடியரசுகளான எஸ்தோனியா, லித்துவேனியா மற்றும் லாட்வியாவில் நிலைநிறுத்துவதற்கான படைக்குழுக்களது முன்னணி கூறுபாடுகளை வழங்க ஒப்புக் கொண்டுள்ளன.

ஏனைய நேட்டோ அங்கத்துவ நாடுகளும் இந்த ஆயத்தப்பாட்டிற்கு சிப்பாய்கள் மற்றும் ஆயுத தளவாடங்களை வழங்கும் என்பதையும் ஸ்டொல்டென்பேர்க் சேர்த்துக் கொண்டார். அதை "பன்னாட்டு" நிலைநிறுத்தல் என்று வர்ணித்து, அவர் வலியுறுத்துகையில் "எந்தவொரு கூட்டாளி மீதான [ஒ]ரு தாக்குதலும் எங்கள் அனைவரது மீதான ஒரு தாக்குதலாக கருதப்படும்,” என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது என்றார்.

அமெரிக்க பாதுகாப்பு செயலர் அஷ்டன் கார்ட்டர் கூறுகையில், வாஷிங்டன் அண்ணளவாக 900 சிப்பாய்களின் ஒரு "போருக்கு தயாரான படை நடவடிக்கை குழுவை" கிழக்கு போலாந்திற்குள் அனுப்புமென தெரிவித்தார். ஸ்ட்ரைகர் (Stryker) கவச போர் வாகனத்திற்கு பெயரிடப்பட்ட இரண்டாம் ஸ்ட்ரைகர் குதிரைப்படைப்பிரிவில் இருந்து இத்துருப்புகள் பெற்றப்பட்டுள்ளன. இப்படைப்பிரிவு ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களுக்கு மீண்டும் மீண்டும் அனுப்பப்பட்டன.

இதற்கும் கூடுதலாக, பெண்டகன் 4 ஆம் தரைப்படை பிரிவின் 3 ஆம் கவச படைப்பிரிவு போர்க்குழுவையும், அத்துடன் கூடுதலாக போர்க்கள டாங்கிகள் மற்றும் கனரக ஆயுத தளவாடங்களையும் அனுப்புகிறது, இவை போலாந்தில் நிலைநிறுத்தப்படும் என்றாலும் முன்னாள் சோவியத் குடியரசுகள் மற்றும் ரஷ்யாவின் மேற்கு பக்கத்தில் உள்ள முந்தைய வார்சோ உடன்படிக்கையில் இருந்த நாடுகளின் பொதுவான எல்லையோரங்களிலும் செயல்படும். பிளாக் ஹாக் தாக்குதல் ஹெலிகாப்டரை கொண்ட 10ஆம் போர்க்கள விமானப் படைப்பிரிவும் அனுப்பப்படுகிறது.

நோர்வே இன் இராணுவத்தளத்தில் 330 கடற்படை துருப்புகளை நிலைநிறுத்த திங்களன்று நோர்வே அரசாங்கம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, வாஷிங்டன் அவற்றை நோர்வேக்கு அனுப்பி வருவதாகவும் அறிவித்துள்ளது. “ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையின் போக்கில், அதனிடமிருந்து, கிழக்கில் இருந்து ஒரு நீடித்த சவாலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அந்நகர்வை விவரிக்கையில் நேட்டோவிற்கான அமெரிக்க தூதர் Douglas Lute தெரிவித்தார்.

இதற்கிடையே போர்க்கள டாங்கிகள், கவச தரைப்படை போர் வாகனங்கள் மற்றும் டிரோன்களோடு எஸ்தோனியாவில் 800 துருப்புகளை நிலைநிறுத்தும் அதன் திட்டங்களை பிரிட்டன் அறிவித்துள்ளது. இதனுடன் பிரான்ஸ் மற்றும் டென்மார்க் இன் பிரிவுகளும் சேர்ந்துக் கொள்ளும். பிரிட்டிஷ் போர்விமானங்கள் ருமேனியாவிற்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

லித்துவேனியா மீதான நாஜிக்களது ஆக்கிரமிப்புக்கு பின்னர், அந்நாட்டிற்குள் ஜேர்மன் இராணுவத்தின் முதல் நுழைவைக் குறிக்கும் வகையில், ஜேர்மனி லித்துவேனியாவில் 400 மற்றும் 600 துருப்புகளுக்கு இடையிலான ஒரு படைப்பிரிவை நிலைநிறுத்தும். நாஜிக்கள் அந்நாட்டில் ஒரு மில்லியன் யூதர்களில் கால்வாசிக்கும் நெருக்கமானவர்களை படுகொலை செய்திருந்தனர். நெதர்லாந்து, நோர்வே, பெல்ஜியம், குரோஷியா மற்றும் லுக்சம்பேர்க் ஆகியவற்றின் படைப்பிரிவுகளால் ஜேர்மன் நிலைநிறுத்தம் ஆதரிக்கப்படும்.

கனடா, 140 இத்தாலிய இராணுவ சிப்பாய்களுடன் இணைந்து கொள்ள லாட்வியாவிற்கு 450 துருப்புகளை அனுப்புவதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்த நிலைநிறுத்தல்களை நியாயப்படுத்தி வெளியேறவிருக்கும் நேட்டோவிற்கான அமெரிக்க துணை பொது செயலாளர் Alexander Vershbow, ஜேர்மன் ஒளிபரப்பு ஸ்தாபனம் Deutsche Welle க்கு அளித்த ஒரு பேட்டியில் அமெரிக்க தலைமையிலான கூட்டணிக்கு "வேறு வாய்ப்பில்லை" என்று தெரிவித்தார்.

“2014 இல் உக்ரேனுக்கு எதிரான அதன் ஆக்கிரமிப்பு, சட்டவிரோதமாக கிரிமியாவை இணைத்துக் கொண்டமை ஆகியவற்றுடன் ரஷ்யா ஒட்டுமொத்த சூத்திரத்தையும் மாற்றியது,” என்றவர் தெரிவித்தார்.

இது முகத்துக்கு நேராக அப்பட்டமான ஒரு பொய். உக்ரேனிய நெருக்கடி கிரெம்ளின் செல்வந்த தட்டின் பாகத்திலிருந்து வந்த "ஆக்கிரமிப்பால்" தூண்டிவிடப்பட்டதல்ல, மாறாக வாஷிங்டன் மற்றும் பேர்லின் வன்முறையான பாசிசவாத மற்றும் வலதுசாரி தேசியவாத சக்திகளை அணிதிரட்டியதன் மூலமாக கியேவ் இல் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அரசாங்கத்தைத் தூக்கியெறிய செய்த சூழ்ச்சியால் தூண்டிவிடப்பட்டது. அமெரிக்க துணை வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நூலாண்ட், உக்ரேனிய ஆட்சி மாற்றத்தை முன்னெடுப்பதற்கு அமெரிக்கா 5 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளதாக தற்பெருமைபீற்றியதோடு, அமெரிக்கா தன்னைத்தானே அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியுடன் பகிரங்கமாக இணைத்திருந்தது.

கிரிமியா 1956 இல் தான் உக்ரேனிய நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது, அப்போது ரஷ்யாவும் உக்ரேனும் சோவியத் ஒன்றியத்தின் பாகமாக இருந்தன, ரஷ்யாவுடனான கிரிமியாவின் மறுஒருங்கிணைப்பானது, ஒரு வெகுஜன மக்கள் வாக்கெடுப்பில் அப்பிராந்தியத்தின் மக்களால் அதிகரித்தளவில் ஆதரிக்கப்பட்டிருந்தது. மாஸ்கோவின் நிலைப்பாட்டிலிருந்து, இது ரஷ்யாவின் கருங்கடல் கப்பற்படையின் வரலாற்று தளத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு தற்காப்பு நடவடிக்கையாக இருந்தது.

ரஷ்யாவை சுற்றி பாரபட்சமற்ற இராணுவ சுற்றிவளைப்பின் விளைபயனே உக்ரேனிய ஆட்சிக்கவிழ்ப்பு சதியாகும், அதன் கிழக்கு எல்லைகளில் இருந்து 800 மைல் தூரத்தில் நேட்டோ நகர்ந்து வந்துள்ளது. இப்போது புதனன்று அறிவிக்கப்பட்ட நிலைநிறுத்தல்கள் இந்த பகுதிகளுக்குள் "கணிசமான" எண்ணிக்கைகளில் மேற்கு துருப்புகளை அனுப்பக்கூடாது என்ற நேட்டோ மற்றும் மாஸ்கோவிற்கு இடையே பேரம்பேசப்பட்ட உடன்படிக்கையை ஒன்றுமில்லாது ஆக்குகிறது.

உக்ரேனிய ஆட்சிக்கவிழ்ப்பு சதியை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எஸ்தோனியா மற்றும் ஏனைய இரண்டு பால்டிக் நாடுகளை "அம்மண்ணில் அமெரிக்க தரைப்படையை இறக்கி" பாதுகாக்க வாஷிங்டனின் "என்றென்றுமான" கடமைப்பாட்டை அறிவிக்க எஸ்தோனியாவிற்குப் பறந்து சென்றார், அவ்விதத்தில் மோதலுக்கு பேரார்வம் கொண்ட வலதுசாரி மற்றும் போர்வெறிபிடித்த மூன்று சிறிய ரஷ்ய-விரோத அரசாங்கங்களின் எல்லைப்பகுதிகளைப் பாதுகாப்பதில் அமெரிக்காவை போருக்கு பொறுப்பேற்க செய்தார்.

நடப்பு நேட்டோ ஆயத்தப்படுத்தலை இன்னும் கூடுதலாக நியாயப்படுத்தி, ஸ்டொல்டென்பேர்க் புதனன்று அறிவிக்கையில், “நமது எல்லைகளுக்கு நெருக்கமாக, ரஷ்யா அதன் ஆக்ரோஷமான இராணுவ தோரணையைத் தொடர்கிறது,” என்றார். நேட்டோ தான் ரஷ்யாவின் சொந்த எல்லைகளை எட்டும் தொலைவிற்கு விரிவாக்கி உள்ளது என்கிற நிலையில், இது நடைமுறையளவில் என்ன அர்த்தப்படுத்துகிறது என்றால் ரஷ்யா அதன் சொந்த நிலப்பகுதியில் ஆயுதமேந்திய படைகளை கொண்டிருப்பதனாலேயே அது ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறது என்றாகிறது.

ரஷ்யாவுடனான, அத்துடன் நேட்டோ கூட்டணிக்கு உள்ளேயே கூட நிலவும் பதட்டங்கள், விமானந்தாங்கி போர்க்கப்பல் அட்மிரல் Kuznetsov தலைமையில் மாஸ்கோ எட்டு-போர்க்கப்பல் இஃப்ளோடில்லாவை சிரிய அரசாங்கத்திற்கு ஆதரவான ரஷ்ய நடவடிக்கைகளை ஆதரிக்க கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு அனுப்பியபோது இன்னும் கூடுதலாக அதிகரித்தது.

இந்த ரஷ்ய இஃப்ளோடில்லா எரிபொருள் நிரப்புவதற்காக ஆபிரிக்காவின் வடக்கு கடற்கரையின் ஸ்பானிஷ் ஆட்சியிலுள்ள துறைமுக நகரமான Ceuta இல் நிற்குமென்ற செய்திகள் வெளியானதும், அந்த ரஷ்ய போர்க்கப்பல்கள் அங்கே நின்று செல்வதற்கான அனுமதியை மறுக்குமாறு ஸ்பானிஷ் அரசாங்கத்தின் மீது நேட்டோ சக்திகள் ஆழ்ந்த அழுத்தத்தைப் பிரயோகித்தன.

பிரிட்டிஷ் பாதுகாப்பு செயலர் மிஷேல் ஃபலோன் அறிவிக்கையில், "சிரியா மீது குண்டுவீசுவதை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய ஒரு ரஷ்ய விமானந்தாங்கி போர்க்கப்பல் குழுவுக்கு ஒத்துழைப்பதை ஒரு நேட்டோ அங்கத்துவ நாடு கவனித்தில் கொண்டால்,” அவரது அரசாங்கத்திற்கு "அது மிகவும் கவலை ஏற்படுத்தும்,” என்றார்.

2011 இல் இருந்து Ceuta இல் எரிபொருள் மற்றும் பண்டங்களை ஏற்றுவதற்கு அண்மித்து 60 ரஷ்ய போர்க்கப்பல்களை ஸ்பெயின் அனுமதித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நடைமுறை அமெரிக்க காங்கிரஸ் இன் கண்டனங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது மற்றும் ரஷ்ய கப்பல்களுக்கு இடமளிக்கும் நாடுகள் குறித்து பெண்டகன் காங்கிரஸ் க்கு அறிக்கை அளிக்குமாறு கோரி அமெரிக்க இராணுவ செலவின சட்டமசோதாவில் கடந்த மே மாதம் ஒரு திருத்தம் இணைக்கப்பட்டது.

அந்த துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்கான அதன் கோரிக்கையை மாஸ்கோ திரும்ப பெற்றுவிட்டதாக புதனன்று ரஷ்ய ஊடகங்கள் அறிவித்தன, அதேவேளையில் கப்பல்கள் அவை அடைய வேண்டிய இடம் வரையில் போதிய எரிபொருள் மற்றும் பண்டங்களைக் கொண்டிருப்பதாக ரஷ்ய அரசாங்க ஆதாரநபர்கள் தெரிவித்தனர்.

இந்த முரண்பாடு ரஷ்யாவுடன் தீவிரமடைந்து வரும் மோதலின் அழுத்தத்தின் கீழ் நேட்டோ கூட்டணிகளுக்குள் ஏற்பட்டுள்ள பரந்த பிளவுகளை பிரதிபலிக்கிறது. ரஷ்யாவிற்கு எதிரான தடையாணை நடைமுறைகளால் தெற்கு ஐரோப்பிய நாடுகளது, குறிப்பாக ஸ்பெயின், இத்தாலி மற்றும் கிரீஸ் இன் சொந்த பொருளாதார நெருக்கடிகளே ஆழமடைந்துள்ளன என்பதால் அவை அதிகரித்தளவில் அவற்றிற்கு விரோதமாக வளர்ந்துள்ளன. இதற்கிடையே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நலன்களுக்கு இடையே அதிகரித்துவரும் மோதலைப் பிரதிபலிக்கும் வகையில், ஜேர்மனி மற்றும் பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு சுதந்திர இராணுவ கூட்டணியாக மாற்றும் திட்டங்களை வெள்ளோட்டமிட்டுள்ளன.

வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகள் ஆதரிக்கும் அல் கொய்தா இணைப்பு கொண்ட இஸ்லாமிய போராளிகள் குழுக்களது கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு அலெப்போ மற்றும் ஏறைய பகுதிகளுக்கு எதிரான விமானத் தாக்குதலில் Kuznetsov இல் உள்ள போர்விமானங்கள் இணையும் என்ற எச்சரிக்கைகளோடு, சிரியா நிலைமை மீதான "மனிதாபிமான" கவலைகள் என்று கூறி நேட்டோ அதிகாரிகள் ரஷ்ய இஃப்ளோடில்லா பிரச்சினையை எழுப்பியுள்ளனர்.

போர் விமானங்கள் மற்றும் அதிநவீன இடம் விட்டு இடம் நகரும் S-400 மற்றும் S-300 ஏவுகணை பாதுகாப்பு முறைகளை சிரியாவிலேயே ரஷ்யா நிலைநிறுத்தி இருப்பதோடு சேர்ந்து, கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் ரஷ்ய கடற்படையின் ஆயத்தப்படுத்தலானது, வரலாற்றுரீதியில் ஆசியாவை நோக்கிய அமெரிக்க "முன்னிலையால்" மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள ஆறாவது அமெரிக்க கப்பற்படை பயன்படுத்திய பகுதி மீதான கட்டுப்பாட்டுக்கு சவால் விடுக்கிறது என்பது தான் ஐயத்திற்கிடமின்றி மிகவும் அடிப்படையான கவலையாகும்.

சிரியாவுக்குள்ளும் மற்றும் அதைச் சுற்றியும் உள்ள ரஷ்யாவின் குண்டுவீச்சு ஆற்றல் "விமானம் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதி" ஒன்றை ஏற்படுத்துவதை நடைமுறையளவில் பிரயோசனமற்றதாக ஆக்கியுள்ளது, இக்கொள்கை ரஷ்யா உடனான ஒரு நேரடி இராணுவ மோதலுக்கு வெளியே ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் அமெரிக்க வெளியுறவு கொள்கை ஸ்தாபகத்தால் ஊக்குவிக்கப்படுகிறது.

இது தேசிய புலனாய்வுத்துறையின் அமெரிக்க இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர் செவ்வாயன்று வெளியுறவு கவுன்சிலுக்கு வழங்கிய கருத்துக்களில் ஒப்புக் கொள்ளப்பட்டது. “அவர்களது தரைப்படைகளை அச்சுறுத்துவதாக அவர்கள் உணர்ந்தால், அவர்கள் ஒரு அமெரிக்க போர்விமானம் ஒன்றை சுடுவதற்கு உத்தரவிடலாம் என்று நான் நினைக்கிறேன்,” என்று வெளியுறவுத்துறை கவுன்சிலின் கலந்துரையாடலின்போது ரஷ்ய இராணுவம் குறித்து கிளாப்பர் தெரிவித்தார். “அங்கே அவர்கள் வைத்திருக்கும் அமைப்பு அதிநவீனமானது, மிக ஆற்றல் வாய்ந்தது, மேலும் அதை பயன்படுத்தும் எண்ணம் இல்லாமல் அதை அவர்கள் அங்கே வைத்திருக்க மாட்டார்கள்—நிலைநிறுத்தி இருக்க மாட்டார்கள்—என்றே நான் நினைக்கிறேன்,” என்றார்.

வெடிப்புப்புள்ளி கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்டாலும் சரி அல்லது சிரியாவில் ஏற்பட்டாலும் சரி, உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க ஏகாதிபத்திய உந்துதல் ஒரே சீராக உலக போர் அச்சுறுத்தலை தீவிரப்படுத்தி வருகிறது.