ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French police launch demolition of “Jungle” refugee camp in Calais

கலே இன் "ஜங்கிள்" அகதிகள் முகாமை பிரெஞ்சு பொலிஸ் தகர்க்க தொடங்கியது

By Kumaran Ira and Alex Lantier
25 October 2016

நேற்று, 1,250 கலகம் ஒடுக்கும் பொலிஸ் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக 2,000 க்கும் அதிகமான ஏனைய பாதுகாப்பு படைகள், பிரான்சின் கலே இல் உள்ள "ஜங்கிள்" அகதிகள் முகாமை சுற்றி வளைத்து, அதில் வசித்தவர்களைப் பலவந்தமாக வெளியேற்றி, அம்முகாமை அகற்றத் தொடங்கின.

அந்நடவடிக்கை நள்ளிரவுக்கு முன்னதாக தொடங்கி இருந்தது. கவச உடையணிந்து, தடுப்புகள் மற்றும் குறுந்தடிகள் ஏந்திய பொலிஸ் அம்முகாமை சுற்றி வளைத்து அணிவகுத்தனர். அம்முகாமில் ஆபிரிக்க, ஆசிய மற்றும் மத்திய கிழக்கின் வறிய மற்றும் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து தப்பி பிரிட்டனை நோக்கி செல்வதற்கு முயன்ற 7,000 அகதிகள் வசிக்கின்றனர்.

டஜன் கணக்கான அகதிகள் தீ இட்டும், கற்கள் மற்றும் போத்தில்களை வீசியும் பாதுகாப்பு படைகளை எதிர்க்க முயன்றதும், அப்போராட்டங்களை நசுக்க பொலிஸ் அதிகாலையில் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியது. பின்னர் ஆயிரக் கணக்கான அகதிகள் ஏற்றி அனுப்பப்படுவதற்கான வலயங்களுக்குள் அடைக்கப்பட்டனர். கடுங்குளிருக்கு இடையே பலர் மெல்லிய மேலாடைகளையோ அல்லது சாதாரண காலணிகளையோ மட்டுமே அணிந்திருந்த நிலையில், பேருந்துகளில் அடைக்கப்பட்டு பிரான்சில் பரவலாக அமைக்கப்பட்டுள்ள நோக்குநிலைப்படுத்தும் மற்றும் வரவேற்கும் மையங்கள் (centres d'orientation et d'accueil – CAO) என்றழைக்கப்படுவதற்கு அனுப்பப்பட்டனர்.

உள்துறை அமைச்சர் பேர்னார்ட் கசெனேவ் இன் தகவல்படி, அந்நாளின் இறுதியில் பொலிஸ் அந்த அகதிகள் முகாமிலிருந்து 1,918 அகதிகளை 45 பேருந்துகளில் ஏற்றிச் சென்றிருந்தது.

பிரிட்டனை அடையும் முயற்சியில் இறுதி வரையில் அந்த முகாமிலேயே தங்கியிருக்க உத்தேசித்திருந்த, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அந்த அகதிகளது எதிர்ப்பை நசுக்கும் ஒரேயடியான தாக்குதலுக்கு இது வெறும் முன்னறிவிப்பு மட்டுமேயாகும். லு மொண்ட் எழுதியது, “வியாழனன்றோ அல்லது வெள்ளியன்றோ, சுயமாக முன்வரும் எல்லா புலம்பெயர்ந்தோரையும் பேருந்துகள் ஏற்றிச் சென்றுவிடும்போது, கீழ்படியாதிருப்பவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பார்கள். 'பின்னர், நாங்கள் மனிதாபிமான நடவடிக்கையை கொண்டு முடிவுக்குகொண்டு வருவோம்,' என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பின்னர் பொலிஸ் நடவடிக்கை தொடங்கும்.” என்றார்.

இணையற்ற வெறுப்பு மனப்பான்மையோடு, பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் "ஜங்கிள்" அகதிகள் முகாம் மீதான பொலிஸ் தாக்குதலையும் மற்றும் CAO களுக்கு அகதிகள் பலவந்தமாக கொண்டு செல்லப்படுவதை "மனிதாபிமான" நடவடிக்கையாகவும் புகழ்ந்துள்ளது. உண்மையில் இது தஞ்சம் கோரும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான மூர்க்கமான தாக்குதலாகும், இதுதான் நவ-பாசிசவாத தேசிய முன்னணியால் (FN) நீண்டகாலமாக கோரப்பட்டு வந்தது.  

"மனிதர்களை வைத்து வியாபாரம் செய்வதில் நிஜமான பாத்திரம் வகிக்கும் சட்டவிரோத மனித கடத்தல்காரர்களின் கரங்களில், கலே இல் இவர்கள் அபாயகரமாக, பாதிப்பிற்குரிய நிலைமையில் தங்கியிராத வகையில், நியாயமானரீதியில் அகதிகள் அந்தஸ்தைப் பெறக்கூடியவர்களுக்கு" இந்நடவடிக்கை "பிரான்சில் இடம் வழங்கும்" என்று கசெனேவ் தெரிவித்தார்.

பொலிஸ் நடவடிக்கைகளை ஒன்றுவிடாமல் பதிவு செய்து ஒளிபரப்புவதற்கு அரசு அதிகாரிகள் நூற்றுக் கணக்கான இதழாளர்களை வரவழைத்திருந்தனர். அவர்கள் பேருந்தில் அகதிகளை ஏற்றுவதில் ஒருமுகப்பட்டிருந்ததோடு, அதுவொரு "மனிதாபிமான" நடவடிக்கை என்ற சோசலிஸ்ட் கட்சியின் வாதங்களையே எதிரொலித்து, பொலிஸ் தாக்குதல்கள் குறித்து மவுனமாக இருந்தனர்.

Pas-de-Calais இன் உள்ளூர் பொலிஸ் நிர்வாக (prefecture) செய்திக்குறிப்பு குறிப்பிடுகையில், “இப்போது 700 க்கும் அதிகமான இதழாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் புலம்பெயர்ந்தோரின் நலன்களுக்காக அந்நடவடிக்கை குறித்தும் மற்றும் அந்நடவடிக்கையின் தொடர்ச்சியை குறித்தும் கூட செய்தியை வழங்க, இதழாளர்களது திறமையுடன் சிறப்பாக இணைந்தியங்கி வருகின்ற Pas-de-Calais உள்ளூர் பொலிஸ் நிர்வாகத்தின் உதவிகள் கிடைக்கும்,” என்று குறிப்பிட்டது.  

“ஜங்கிள்" அகதிகள் முகாம் மீதான தாக்குதல், அகதிகளை பாதுகாக்க நோக்கம் கொண்டுள்ளது என்ற சோசலிஸ்ட் கட்சியின் வாதம் ஒரு வெறுக்கத்தக்க அரசியல் பொய்யாகும். பெரும்பான்மை அகதிகளை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் சேர்ந்து, அது ஜனநாயக உரிமைகள் மீது ஒரு கடுமையான தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. ஐரோப்பாவெங்கிலும் ஆளும் வர்க்கம் தூண்டிவிட்டு வருகின்ற புலம்பெயர்ந்தோர்-விரோத வெறுப்புகளைக் கொண்டு தொழிலாளர்களை பிளவுபடுத்தவும், சோசலிஸ்ட் கட்சி அதன் சிக்கனத் திட்டங்கள் மற்றும் போர் கொள்கைகளால் மதிப்பிழந்துள்ளதால் எஞ்சியுள்ள அதன் சமூக அடித்தளத்திற்கு, அதாவது பெயரிட்டு கூறுவதானால் பொலிஸிற்கு முறையீடு செய்யவும் இந்த அகதிகள்-விரோத நடவடிக்கை நோக்கம் கொண்டுள்ளது.

“ஜங்கிள்" அகதிகள் முகாமில் கூடாரங்களில் அகதிகள் குறைந்தபட்ச வசதிகளோடு, படுமோசமான நிலைமைகளுக்கு இடையே தங்கியிருக்க நிர்பந்திக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் பிரான்ஸ் எங்கிலுமான கிராமங்கள் மற்றும் சிறுநகரங்களில் உள்ள நூற்றுக் கணக்கான சிறிய முகாம்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டதும் இன்னும் அதிக சிரமமான மற்றும் நிச்சயமற்ற நிலைமைகளை முகங்கொடுப்பார்கள்.

மதிப்பீட்டின்படி “ஜங்கிள்" முகாமில் இருந்த 1,200 குழந்தைகள் அம்முகாமை அகற்றுவதால் அபாயத்திற்குட்படுவார்கள் என்று அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணைக்குழு (UNHCR) வலியுறுத்தியது. UNHCR செய்தி தொடர்பாளர் Adrian Edwards கூறுகையில், அந்நடவடிக்கையால் இடம்பெயர்த்தப்படுபவர்களுக்கு உதவி அத்தியாவசியமாகும். அவ்வாறு செய்தால், "அக்குழந்தைகள் வேறு இடங்களுக்கு செல்லாது, மேலும் பணத்திற்காக சட்டவிரோதமாக மனிதர்களை இடம்பெயர்த்துபவர்களால் சுரண்டப்படும் ஆபத்திற்குட்படாது அல்லது எந்தவித ஆதரவுமின்றி வீதிகளில் வாழ விடப்படுவதிலிருந்து தடுக்கப்படுவர்,” என்றார். இப்போது ஐரோப்பாவில் வாழ்ந்துவரும் யாரேனும் உறவினர்களிடம் குழந்தைகளை கொண்டு சேர்க்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

பிரெஞ்சு பொலிஸின் முறையீட்டின் பேரில், “ஜங்கிள்" அகதிகள் முகாம் மீதான தாக்குதல் தொடங்கியதும் பிரிட்டிஷ் அதிகாரிகள் பிரிட்டனுக்குள் சொற்ப அகதிகள் நுழைவதை கூட தடுத்துவிட்டனர். சமீபத்திய நாட்களில், 60 பெண் குழந்தைகள் உட்பட சுமார் 200 குழந்தைகள் பிரிட்டனுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தனர்.

“கலே இல் திட்டமிட்ட நடவடிக்கையின் காரணமாக, மற்றும் பிரெஞ்சு அதிகாரிகளது வேண்டுகோளுக்கு இணங்க, பரிவர்த்தனை நடைமுறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நாங்கள் தயக்கத்துடன் ஒப்புக் கொண்டோம்,” என்று பிரிட்டிஷ் உள்துறை அலுவலக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

“ஜங்கிள்" அகதிகள் முகாம் மூடுவதானது, ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, சூடான் மற்றும் அதற்கு அப்பாற்பட்டும் ஏகாதிபத்திய போர்கள் மற்றும் இனரீதியிலான மோதல்களில் இருந்து தப்பியோடி வரும் பத்து மில்லியன் கணக்கானவர்களுக்கு தஞ்சம் வழங்குவதை மறுக்கும் மற்றும் அதன் எல்லைகளை மூடும் ஐரோப்பிய ஒன்றியத்தினது பிற்போக்குத்தனமான கொள்கையின் பாகமாக உள்ளது. பயணத்திற்கு உகந்ததல்லாத கப்பல்களில் அடைந்து அகதிகள் மத்தியத் தரைக்கடலுக்கு வந்த நிலையில், இது ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழப்பதற்கு இட்டுச் சென்றுள்ளது—அகதிகளின் உயிரிழப்புகள் மற்றவர்களைப் பயணம் மேற்கொள்ளும் முயற்சியிலிருந்து பின்வாங்க செய்யும் என்று இதுவரையில் ஐரோப்பிய அதிகாரிகள் அறிவித்துள்ளதால், இந்த உயிரிழப்புகள் அவர்களது நயவஞ்சக வரவேற்பின் விளைபொருளாகும்.

இந்த காட்டுமிராண்டித்தனமான கொள்கையின் முக்கியத்துவமானது, உயிரிழந்த அகதிகளின் எண்ணிக்கைகளுக்கும், அல்லது கலே இல் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறவர்களுக்கும் அப்பால் செல்கிறது. ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் மத்திய கிழக்கு எங்கிலும் மக்கள் விரும்பாத அமெரிக்க-தலைமையிலான போர்களில் பங்குபற்றி வருகின்ற நிலையில், அவை உள்நாட்டில் பாரியளவில் பொலிஸ் அதிகாரங்களை கட்டமைத்து வருகின்றன. இது பிரான்ஸை விட வேறெங்கும் மிகவும் வெளிப்படையாக இருக்காது, அங்கே சோசலிஸ்ட் கட்சி நேட்டோவின் சிரிய போரில் ஒன்றுதிரட்டப்பட்ட இஸ்லாமிய வலையமைப்புகளால் பாரீஸ் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர் அவசரகால நிலையை திணித்துள்ளது.

பிரான்ஸில், அகதிகள், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் முஸ்லீம்களே இப்போது பிரதான இலக்கில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றாலும், மத்திய இலக்கில் இருப்பது தொழிலாள வர்க்கமாகும். ஏற்கனவே, பாரிய பெருந்திரளான பிரெஞ்சு இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் இந்த வசந்தகாலத்தில் சோசலிஸ்ட் கட்சியின் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக போராடியபோது, கலகம் ஒடுக்கும் பொலிஸின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு இலக்காக்கப்பட்டனர்.

இந்த அரசியல் தாக்குதலின் மத்திய உள்ளடக்கம் என்னவென்றால், நவ-பாசிசவாதத்தின் வரலாற்று மரபியம் மற்றும் அரசியல் வேலைத்திட்டத்தை சோசலிஸ்ட் கட்சி ஊக்குவிப்பதாகும். நீண்டகாலமாக தீவிர வலதால் மட்டுமே நியாயப்படுத்தப்பட்டு வந்ததும், இரண்டாம் உலக போரில் நாஜி ஆக்கிரமிப்பு பிரான்சிலிருந்து யூதர்களை வெளியேற்றுவதற்கு சட்டபூர்வ சாக்குபோக்காக இருந்ததுமான குடியுரிமையை பறிக்கும் கொள்கையை அரசியலமைப்பில் உள்ளடக்கும் முயற்சிக்கு பின்னர், சமீபத்தில் தேசிய காவற்படையை உருவாக்க வேண்டுமென்ற தேசிய முன்னணியின் மற்றொரு முன்மொழிவையும் சோசலிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண்டது. பிரெஞ்சு மண்ணில் நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகளில் இராணுவத்திற்கு உதவுவதே, வெளிப்படையாக, அதன் நோக்கமாகும்.

இப்போது சோசலிஸ்ட் கட்சி, தேசிய முன்னணியின் மற்றொரு நீண்டகால கோரிக்கையையும் ஏற்று வருகிறது: அதுவாவது, பிரிட்டனை அடையும் முயற்சியில் வடக்கு பிரான்சில் உள்ள அகதிகளது முகாம்களை மூடுவது. "ஜங்கிள்" அகதிகள் முகாம் மீதான தாக்குதலை நேற்று தேசிய முன்னணி ஆதரித்தது, ஆனால் அகதிகளை சோசலிஸ்ட் கட்சி வெளியேற்ற வேண்டுமென அது கோரியது. “சிறிய சிறிய முகாம்களுக்கு பகிர்ந்துவிடுவது தீர்வாகாது, அவர்களது வெளியேற்றமே தீர்வாகும்,” என்று தேசிய முன்னணியின் நிர்வாகி நிக்கோலா பே தெரிவித்தார். “அவர்கள் இங்கிலாந்துக்கு செல்வதை நாம் தடுப்பதற்கு முன்னதாக, அனைத்திற்கும் மேலாக அவர்கள் உள்ளே வருவதையே நாம் தடுக்க வேண்டும்,” என்றார்.

சோசலிஸ்ட் கட்சியோ அல்லது அதற்கடுத்து வெற்றி பெற்று வருவதோ, சமூக சிக்கனத் திட்டம் மற்றும் போருக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புக்கு எதிராக பொலிஸ் எந்திரத்தை மீண்டும் திருப்புவதற்கு நீண்டகாலம் எடுக்காது. கலே இன் நிராயுதபாணியான அகதிகள் மீது ஒரு பிற்போக்குத்தனமான தாக்குதலுக்கு பொலிஸ் இன் கரங்களைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலமாக, அகதிகளுக்கு எதிராக அல்லது உள்நாட்டில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது சமூக போராட்டங்களுக்கு எதிராக அவர்களது அடுத்த கட்ட தாக்குதலுக்கு அது அவர்களை கூடுதலாக பலப்படுத்தும் என்று சோசலிஸ்ட் கட்சி ஐயத்திற்கிடமின்றி நம்புகிறது.