ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Billionaires back Black Lives Matter

Black Lives Matter இயக்கத்தை பில்லியனர்கள் ஆதரிக்கின்றனர்

Gabriel Black
11 October 2016

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த தனியார் அமைப்புகளில் ஒன்றும், வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க அரசாங்கத்துடனான நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளதுமான ஃபோர்ட் அறக்கட்டளை (Ford Foundation) அமைப்பு, Black Lives Matter இயக்கத்தில் முன்னணி பாத்திரம் வகிக்கும் பல அமைப்புகளுக்கு கடந்த ஆறு ஆண்டுகளில் 100 மில்லியன் டாலர்கள் கிடைப்பதை மேற்பார்வை செய்திருந்ததாக சமீபத்தில் அறிவித்தது. (Black Lives Matter இயக்கம் 2012 இல் போலிஸ் வன்முறைக்கு எதிராக ஸ்தாபிக்கப்பட்டது)

“சமூக நீதிக்கு நிதியளிக்கும் இந்த அமைப்பை ஆழப்படுத்தி விரிவாக்க நாங்கள் மிகவும் விரும்புகிறோம்,” என்று அந்த அமைப்பின் அறிவிப்பு குறிப்பிடுகிறது. “துணிச்சலான ஆராய்ச்சிகளை பேணி வளர்த்து, அந்த இயக்கம் பூத்துக்குலுங்க உதவும் உறுதியான உள்கட்டமைப்பை அது கட்டமைப்பதற்கு நாங்கள் உதவ விரும்புகிறோம்,” என்றது குறிப்பிட்டது.

Fortune Magazine குறிப்பிடுகையில், “அதை வாசிக்கும் எவரொருவரும் அதையொரு விளக்க உரையாக [அதாவது, முதலீட்டாளர்களிடம் முதலீடு கோரும் புதிய நிறுவனங்களுக்கான ஒரு முன்வைப்பாக] வாசித்தால்" அந்த அமைப்பின் அறிவிப்பு "நிமிர்ந்து உட்கார வைக்கும்" என்று எழுதியது. இந்தளவிற்கு நிறைய பணம் கிடைப்பதென்பது ஆளும் வர்க்கத்திடமிருந்து அதற்கு கிடைக்கும் ஒரு பெரும் பரிசுதான் என்பதோடு, இது Black Lives Matter இயக்கத்தின் அதிகாரத்துவத்தை சம்பளத்திற்கு நியமிக்கவும் மற்றும் பேரம் பேசும் பதவிகளை உருவாக்கவும் அதை அனுமதிக்கும். இந்த பண உள்வரவானது, பிரச்சார பங்களிப்புகள் மூலமாக அந்த இயக்கத்திற்கு நிறைய செல்வாக்கைக் கொண்டு வந்து, அதை ஜனநாயகக் கட்சி மற்றும் பெருநிறுவன ஊடகங்களுடன் இன்னும் நெருக்கமாக ஒருங்கிணைக்கும்.

Black Lives Matter உடன் தொடர்புபட்ட 14 குழுக்களது ஒரு கூட்டமைப்பிற்கும் ஃபோர்ட் அறக்கட்டளை பல்வேறு விதமான ஆலோசனை மற்றும் வழிகாட்டும் ஒத்துழைப்புகளை வழங்குகின்றது. நிதியுதவி மற்றும் இந்த துணை உதவிகள் இரண்டுமே Borealis Philanthropy என்றழைக்கப்படும் ஒரு நிறுவனத்தால் மேற்பார்வை செய்யப்பட்டு வரும் Black-Led Movement Fund (BLMF) எனப்படும் ஒரு நிதியம் மூலமாக ஒழுங்கமைக்கப்படுகிறது.

ஃபோர்ட் அறக்கட்டளை அதன் நிதிவரவுகளில் பெரும்தொகையை, பெருநிறுவன பங்களிப்பாளர்கள் மற்றும் பெரும் செல்வந்த நன்கொடையாளர்களிடம் இருந்து அறக்கட்டளைகள் மற்றும் சொத்து ஒப்படைப்புகள் மூலமாக பெறுகிறது. ஃபோர்ட் மோட்டார் நிறுவன ஸ்தாபகர் ஹென்றி ஃபோர்ட் மற்றும் அவர் மகனால் 1936 இல் ஸ்தாபிக்கப்பட்ட அது, சுமார் 12.4 பில்லியன் டாலர் மதிப்புடன், இன்று இதுபோன்ற அமைப்புகளிலேயே மூன்றாவது மிகப்பெரியதாக குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குகிறது.

ஃபோர்ட் அறக்கட்டளை பல ஆண்டுகளாக அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை முகமைகளுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்துள்ளது. மத்திய உளவுத்துறையின் (CIA) ஒரு பிரிட்டிஷ் வரலாற்றாளர் Frances Stonor Saunders, கலாச்சார பனிப்போர்: சிஐஏ மற்றும் கலைகள் மற்றும் கடிதங்களின் உலகம் எனும் அவர் நூலில், ஃபோர்ட் மற்றும் ராக்பெல்லர் அறக்கட்டளைகளை "அமெரிக்க உளவுத்துறையுடன் நெருக்கமாக இணைந்திருந்தவர்கள் அல்லது உறுப்பினர்களாகவே கூட இருக்கும் இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட, மறைமுக அமெரிக்க கொள்கையின் நனவுபூர்வமான கருவியாக" வர்ணித்தார்.

இன்று இந்த அமைப்பு உத்தியோகபூர்வமாக ஃபோர்ட் மோட்டார் நிறுவனத்துடன் இணைந்தது அல்ல என்றாலும், தலைமை செயலதிகாரிகள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் வழக்கறிஞர்கள் உட்பட, சக்தி வாய்ந்த பெருநிறுவன அதிகாரிகளைக் குறித்த "தனிநபர்கள் பற்றிய களஞ்சிய" பட்டியலில் இருப்பவர்கள், இதன் இயக்குனர் குழுவில் இருக்கின்றனர். இதன் இயக்குனர்கள் குழுவின் தலைவராக Irene Inouye உள்ளார், இவர் காலஞ்சென்ற ஜனநாயகக் கட்சி செனட்டர் Daniel Inouye இன் விதவை மனைவியாவர்.

Black Lives Matter இயக்கத்தின் நோக்கங்கள், வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் நோக்கங்களுடன் அணி சேர்ந்துள்ளன என்பதற்கு ஆளும் வர்க்கத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகளது ஒப்புதலே, இந்த 100 மில்லியன் டாலர்கள் அன்பளிப்பாகும்.

2015 இல் Bloomberg News உடனான ஒரு நேர்காணலில், ஃபோர்ட் அறக்கட்டளையின் தற்போதைய தலைவரும், UBS இன் முன்னாள் வங்கியாளருமான Darren Walker, Black Lives Matter க்கு நிதியுதவி வழங்குவது குறித்த ஃபோர்ட் அறக்கட்டளையின் முடிவுக்கு காரணமாகவிருந்த முதலாளித்துவ-சார்பு முன்னோக்கை விவரித்தார்:

“இன்னும் நியாயமான மற்றும் நீதியான ஒரு உலகைக் குறித்த நமது தொலைநோக்கு பார்வையை சமத்துவமின்மை பல வழிகளில் பலவீனப்படுத்துகிறது,” என்றவர் தெரிவித்தார். “உண்மையில், வெறும் ட்ரம்ப் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, அமெரிக்கர்களே கூட, அதிகரித்தளவில் பாதிக்கப்பட்டவர்களாகவும், அதிகரித்தளவில் பாதுபாப்பின்றி இருப்பவர்களாகவும் உணர்கிறார்கள், அது என்ன செய்கிறது என்றால் அது நமது சமூகத்தில், நமது ஜனநாயகத்தில் இடைவெளிகளை அதிகரிக்கிறது. சமத்துவமின்மை என்பது நமது ஜனநாயகத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியதாகும். அது அபிலாஷைகளையும் கனவுகளையும் நசுக்கி, மக்களைப் போலவே நம்மையும் அதிக ஆத்திரமடைந்தவர்களாக ஆக்குகிறது… அமெரிக்காவில் நாம் என்ன மாதிரியான முதலாளித்துவம் இருக்க வேண்டுமென விரும்புகிறோம்?” என்றார்.

Black Lives Matter இயக்கத்திற்கு ஃபோர்ட் அறக்கட்டளையின் ஆதரவு என்பது, இலாபகர அமைப்புமுறையின் பாதுகாப்பிற்காக முதலீடு செய்வதாகும். Black Lives Matter இயக்கம், உலகம் இனரீதியில் பிளவுபட்டிருப்பதாக சித்தரிப்பதுடன், அதன் வலைத் தளத்தில், "ஒரு உலகளாவிய கறுப்பின குடும்பத்தினரின் பகுதியாக தன்னை காண்பதாக" அறிவிக்கிறது.

கறுப்பின மக்கள் "பரந்த குடும்பங்களாக மற்றும் 'சமூகங்களாக' இருக்கிறார்கள், இவை ஒருவரையொருவர், குறிப்பாக 'நமது' குழந்தைகளை… கூட்டாக பராமரிக்கின்றன,” என்று அது வாதிடுகிறது. சமூகத்தின் எந்தவொரு பிரிவும் அதன் சொந்த துன்பங்களை எழுப்புவதற்கு உரிமை கொண்டுள்ளது என்பதை இது வெளிப்படையாக நிராகரிக்கிறது. அதன் குழுவின் வரலாற்று பக்கம் குறிப்பிடுகிறது: “எல்லோருமே வாழ்ந்துவிடுவதில்லை. கறுப்பினர்களே வாழ்கிறார்கள். உங்கள் வாழ்க்கை விடயங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதையெல்லாம் பேசி தயவுசெய்து உரையாடலை மாற்றி விடாதீர்கள்,” என்கிறது.

Black Lives Matter இயக்கத்தின் குட்டி-முதலாளித்துவ தலைவர்கள் இப்போது அரசியல் உயரடுக்கிற்குள் தனிச்சலுகைகளை பெறுவதை நோக்கி, கணிசமான அளவிற்கு அரசியல் செல்வாக்கை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். Black Lives Matter இயக்கத்தின் ஸ்தாபகர்களை நோக்கிய ஒரு மேலோட்டமான பார்வையே கூட ஒட்டுமொத்தமாக அந்த குழுவின் சந்தர்ப்பவாத மற்றும் தற்பெருமை பீற்றும் குணாம்சத்தின் சுபாவத்தை எடுத்துக்காட்டுகிறது. உத்தியோகபூர்வமான Black Lives Matter அமைப்பு, Alicia Garza, Patrisse Cullors மற்றும் Opal Tometi ஆகிய மூன்று நபர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. அம்மூவரும் தலைமை மற்றும் கண்ணியத்திற்காக கறுப்பின மக்களை ஒழுங்கமைக்கும் அமைப்பான BOLD இன் அங்கத்தவர்களாக சந்தித்தனர். கறுப்பினத்தவர் தலைமையிலான இயக்க நிதியால் (Black-Led Movement Fund) இப்போது நிதியுதவி வழங்கப்பட்டு வரும் 14 அமைப்புகளில் BOLD உம் ஒன்றாகும்.

இந்த ஸ்தாபகர்களில் ஒருவரான Garza, தேசிய ஜனநாயக தொழிலாளர் கூட்டணி என்றழைக்கப்படும் ஒரு அமைப்பை நடத்தி வருகிறார், அதன் பொதுக்குழுவில் Alta Starr இடம்பெற்றுள்ளார். ஃபோர்ட் அறக்கட்டளையின் ஒரு நிதியம் Starr இன் மேற்பார்வையில் உள்ளது. இந்த பெண்மணி பில்லியனர் ஜோர்ஜ் சோரோஸ் (George Soros) ஆதரிக்கும் ஒரு அமைப்பான Open Society Foundation இன் சதேர்ன் இனிஷிடிவ் இன் (Southern Initiative) பொதுக்குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.

Patrisse Cullers மனித உரிமைகளுக்கான Ella Baker மையத்தின் இயக்குனர் ஆவார். இந்த அமைப்பை, “சுற்றுச்சூழலை பாதிக்காத வேலைகள், நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான" ஒரு சிறப்பு ஆலோசகராக ஒபாமாவின் கீழ் வேலை செய்த ஜனநாயக கட்சிக்காரரான வான் ஜோன்ஸ் (Van Jones) நிறுவினார். இவர் CNN க்கு நீண்டகால பங்களிப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்த அமைப்பு Open Society Foundation இல் இருந்தும் நிதியுதவிகளைப் பெறுகிறது.

சோரோஸ் நிதியுதவி வழங்கும் US Programs/Open Society இன் அக்டோபர் 2015 பொதுக்குழு கூட்டத்திலிருந்து கசியவிடப்பட்ட ஆவணம் ஒன்று, அந்த அமைப்பு "#BlackLivesMatter இயக்கத்தை வளர்ப்பதில் மையத்திலுள்ள குழுக்களை ஆதரிக்கவும் மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்கவும் உதவுவதற்காக" 650,000 டாலர்கள் வழங்கியதை எடுத்துக்காட்டியது. ஒரு பன்முகத்தன்மை கொண்ட இயக்கத்தைக் கையாள்வதில் உள்ள சிரமங்களைக் குறித்து விவாதிக்க பொதுக்குழு திட்டமிட்டதாக அந்த ஆவணம் குறிப்பிடுகிறது: “ஒரு தருணத்தில் [மூலப்பிரதியில் உள்ளவாறு] நீங்கள் நிறைய பணத்தை வாரியிறைக்க விரும்புகையில் என்ன நடக்கும், அதுவும் அது நகர்வதற்கு வேறு இடம் இல்லாத போது?” சோரோஸ் இன் நிதியியல் ஒத்துழைப்பு குறித்து பொதுமக்களுக்கு தெரிய வரும்போது, அவரது பெயர் Black Lives Matter இன் நன்மதிப்பைக் கெடுத்துவிடும் என்றும் அந்த ஆவணம் குறிப்பிட்டிருந்தது.

ஃபோர்ட் நிதியுதவி பெறுபவர்களின் பட்டியலில் உள்ள பல அமைப்புகள், புதிதாக உருவாக்கப்பட்ட "Movement for Black Lives” இன் அங்கத்துவ அமைப்புகளாகவும் இருக்கின்றன. இது கறுப்பினர்களுக்கு சொந்தமான வர்த்தகங்கள் மற்றும் அமைப்புகளுக்கு அரசு நிறைய நிதியுதவி வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகளை மையப்படுத்தி, கொள்கை திட்ட ஆவணம் ஒன்றை பிரசுரித்துள்ளது.

ஆரம்ப காலத்தில், Black Panthers போன்ற தேசியவாத இயக்கங்கள் அரசியல்ரீதியில் நோக்குநிலை பிறழ்ந்திருந்தாலும், சமூக போராட்டத்திலும் மற்றும் அரசுடனான முரண்பாடுகளிலும் ஓர் உண்மையான கூறுபாடுகளாக இருந்தன. அவற்றின் அரசியல் வேலைத்திட்டத்தில் ஒரு குட்டி-முதலாளித்துவ குணாம்சம் இருந்த போதும் கூட, அவை ஒடுக்கப்படுபவர்கள் மத்தியில் கணிசமான ஆதரவை பெற்றிருந்தன. அந்த காலக்கட்டம், தெற்கில் ஜிம் குரோவ் பிரிவினைவாதத்திற்கு எதிரான பெருந்திரளான மக்களது குடியுரிமை இயக்கம் மற்றும் வடக்கில் நகர்புற கிளர்ச்சிகளின் காலகட்டமாக இருந்தது.

1960 களின் இறுதியில் எழுந்த மேலெழுச்சிகளுக்கு விடையிறுப்பதில், ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு, நடைமுறையில் இருப்பதற்கு விசுவாசமாக இருக்கும் நிறைய தனிச்சலுகை கொண்ட சிறுபான்மையினரின் பிரிவுகளிடையே ஆதரவு அடித்தளத்தை தோற்றுவிக்க முயன்றது. இடஒதுக்கீட்டு நடவடிக்கை போன்ற கொள்கைகளின் விளைவாக, ஆபிரிக்க-அமெரிக்கர்களிடையே சமூக சமத்துவமின்மை அதிகரித்துள்ளதுடன், பெருநிறுவன அமெரிக்காவில் மற்றும் அரசில் ஒரு சிறிய உயரடுக்கு அதிகாரங்களைக் கைப்பற்றியுள்ளது. 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவைத் தொடர்ந்து நிதியியல் பிரபுத்துவத்திற்கு செல்வவளத்தை வரலாற்றுரீதியில் கைமாற்றுவதற்காக ஜனாதிபதியாக இருந்து தலைமை தாங்குவதற்கு பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டதில் இது அதன் உச்சத்தைக் கண்டது.

இத்தகைய சமூக மாற்றங்கள், Black Lives Matter இயக்கத்தின் அரசியல் கண்ணோட்டத்திலும் பிரதிபலிக்கிறது, அது சமூக போராட்டத்தில் அல்லது ஜனநாயக போராட்டத்தில் உள்ள எந்தவிதமான உண்மையான உட்கூறையும் ஒதுக்கி விடுகிறது. ஃபோர்ட் அறக்கட்டளை போன்ற குழுக்களின் ஆதரவால் எடுத்துக்காட்டப்படுவதைப் போல, எந்தவொரு இனம் அல்லது இனத்துவத்தை சேர்ந்த மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் மற்றும் இளைஞர்களின் உண்மையான சமூக மற்றும் பொருளாதாரக் குறைகளை தீர்ப்பதோடு இத்தகைய அமைப்புகளின் செயல்திட்டம் தொடர்புபட்டதல்ல. அவை மக்கள் தொகையில் மேலே உள்ள 10 சதவீதத்தினருக்குள் செல்வவளத்தை பங்கு போடுவதில் சண்டையிட்டு வரும் மிகப்பெரும் தனிச்சலுகை கொண்ட நடுத்தர வர்க்க அடுக்குகளின் சார்பாக பேசுகின்றன.

போர், போலிஸ் வன்முறை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக அதிகரித்துவரும் மக்கள் எதிர்ப்புக்கு முன்னால், இனரீதியிலான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் Black Lives Matter இயக்கத்தின் தீர்மானம், தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதையும் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு சுயாதீனமான மற்றும் ஒருங்கிணைந்த தொழிலாள வர்க்க இயக்கம் எழுச்சி பெறுவதை தடுப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

கட்டுரையாளரின் ஏனைய பரிந்துரைகள்:

அடையாள அரசியலின் சமூகபொருளாதார அடித்தளம்: சமத்துவமின்மையும், ஓர் ஆபிரிக்க அமெரிக்க உயரடுக்கின் வளர்ச்சியும்

[30 August 2016]

இசை அமைப்பாளர்-பாடகர் M.I.A., Black Lives Matter அமைப்பை விமர்சித்ததால் Afropunk  விழாவிலிருந்து நீக்கிவிடப்பட்டார்

[18 July 2016]