ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The ruling class meets at Davos

ஆளும் வர்க்கம் டாவோஸில் கூடுகிறது

Andre Damon
19 January 2016

புதனன்று சுமார் 2,500 பெருநிறுவன நிர்வாகிகள், பிரபலங்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள், ஆல்ப்ஸ் மலை பனிச்சறுக்கு விளையாட்டுக்கள் மற்றும் 1,000 டாலர் மதிப்பிலான ஆடம்பர இரவு உணவு ஆகியவற்றிற்கு இடையே, "உலக நிலையை மேம்படுத்துவது குறித்து" விவாதிக்க சுவிட்சர்லாந்து டாவோஸின் உலக பொருளாதார பேரவையில் ஒன்றுகூடுவார்கள்.

கோல்ட்மன் சாச்ஸ், ஜேபி மோர்கன் சாஸ் மற்றும் தோற்றப்பாட்டளவில் ஏனைய ஒவ்வொரு பிரதான வங்கி மற்றும் தனியார் முதலீட்டு நிறுவன தலைவர்களும், அரசை ஒழுங்குப்படுத்துவதற்குப் பெயரளவிற்குப் பொறுப்பேற்றுள்ள அரசாங்க அதிகாரிகளுடன் தோளுடன் தோள் சேர்ந்து நிற்பார்கள். அமெரிக்க கருவூலத்துறை செயலர் ஜாகோப் லெவ், வர்த்தகத்துறை செயலர் பென்னி ப்ரிட்ஜ்கர் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் மரியோ திராஹி ஆகியோரும் அதில் உள்ளடங்குவர்.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோசப் பிடன் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி, உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில் கேட்ஸ், அத்துடன் ஜிஎம், கூகுள், அலிபாபா, மைக்ரோசாப்ட் (GM, Google, Alibaba, Microsoft)  இன் தலைமை நிர்வாகிகள் மற்றும் பேஸ்புக்கின் தலைமை செயலதிகாரி ஆகியோரும் ஏனைய விருந்தாளிகளில் உள்ளடங்குவர். கிரேக்க மக்கள் மீது கடந்த ஆண்டு அதிகளவிலான சிக்கன நடவடிக்கைகளைத் திணித்த கிரேக்க ஜனாதிபதி அலெக்சிஸ் சிப்ராஸ், சந்தேகத்திற்கு இடமின்றி உளமார வரவேற்கப்பட உள்ளார்.

விவாதத்தின் உத்தியோகபூர்வ தலைப்பு "நான்காம் தொழிற்துறை புரட்சியை வடிவமைத்தல்" என்பதாக இருந்தாலும், அதைவிட விவாதத்திற்கு உள்ள விடயங்கள் உறுதியானதாகவும் அவசரமானதாகவும் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்காது. “அதிகபட்ச கவலையளிக்கும் உலகளவிலான அபாயங்களை" வரையறுக்கும் மாநாட்டு ஆவணம் ஒன்று, “வேலைவாய்ப்பின்மை அல்லது தகுதிக்கு குறைந்த வேலைவாய்ப்பு, எரிசக்தித்துறை விலை அதிர்வு, நிதிய நெருக்கடிகள், தேசிய ஆட்சிமுறையின் தோல்வி, ஆழ்ந்த சமூக ஸ்திரமின்மை, நிதிய இயங்குமுறை அல்லது அமைப்புகளின் தோல்வி, சொத்து குமிழி" மற்றும் "நாடுகளுக்கு இடையிலான மோதல்,” என்ற அம்சங்களுடன் தொடங்குகிறது.

இந்த அச்சங்கள் முற்றிலும் நியாயமானதே. இந்தாண்டின் கூட்டமானது உலகளவில் பங்கு விற்றுத்தள்ளல், பண்டங்களது விலை வீழ்ச்சி, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஆழமடைந்துவரும் பிளவுகள், அத்துடன் மத்திய கிழக்கு, கிழக்கு ஐரோப்பா மற்றும் பசிபிக்கில் அதிகரித்துவரும் பதட்டங்கள் ஆகியவற்றின் பின்புலத்தில் தொடங்குகிறது.

டாவோஸில் உலகளாவிய பில்லியனர்கள் ஒன்றுகூடல், அதில் பங்கேற்பவர்கள் விவாதிக்க உள்ள சமூக நெருக்கடிக்களைத்தான் உள்ளடக்கியுள்ளது. சமூக சமத்துவமின்மை கடந்த ஆண்டு அதிகரித்திருப்பதை எடுத்துக்காட்டி, உலகளாவிய தொண்டு நிறுவனம் ஆக்ஸ்ஃபாம் திங்களன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு வெறும் இரண்டு நாட்களில் இக்கூட்டம் தொடங்க உள்ளது. “2015 இல், 3.6 பில்லியன் மக்கள், அதாவது மனிதயினத்தின் அடிமட்ட அரைவாசி பேர் வைத்திருக்கும் அதேயளவிலான செல்வவளத்தை வெறும் 62 தனிநபர்கள் வைத்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை, மிகச் சமீபத்திய 2010 இல் 388 தனிநபர்களிடம் இருந்து குறைந்துள்ளது” என்பதை ஆக்ஸ்ஃபாம் குறிப்பிட்டது.

இதில் பெரும்பாலானவர்கள் இவ்வாரம் சுவிட்சர்லாந்திற்கு அனேகமாக செல்வார்கள். இந்த 62 தனிநபர்களின் செல்வவளம், 2010 க்குப் பின்னர் 44 சதவீதம் அதிகரித்துள்ளது, அதேவேளையில் உலக மக்கள்தொகையில் அடிமட்டத்தில் உள்ள அரைவாசி பேரின் செல்வவளம் அதே காலகட்டத்தில் 41 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது. “உலகின் 80 மிகப்பெரிய செல்வந்த பில்லியனர்கள் 2015 இல் 2 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான நிகர செல்வவளத்தை கொண்டிருந்தார்கள். இதற்கிடையே இப்புவியின் அடிமட்டத்தில் உள்ள அரைவாசி பேரின் கூட்டு செல்வவளம் கடந்த ஐந்தாண்டுகளில் அண்மித்தளவில் 1 ட்ரில்லியன் டாலர் அளவிற்கு சரிந்துள்ளது,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

2008 நெருக்கடிக்குப் பின்னர், உற்பத்தி வெளியீட்டில் தொடங்கி உற்பத்தி முதலீடு மற்றும் கூலிகள் உயர்வு வரையில், ஒவ்வொரு பொருளாதார புள்ளிவிபரங்களும் பொருளியல் நிபுணர்கள் முன்கணித்ததை விட தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துள்ளன. ஆனால் உலகளாவிய பொருளாதாரமோ பில்லியனர்களை உருவாக்கி, அவர்களைச் செழிப்படையச் செய்யும் ஒன்றை மட்டும் மிகவும் சிறப்பாக செய்ய தகைமை கொண்டிருப்பதை நிரூபித்துள்ளது.

2016 அளவில் உலக மக்கள்தொகையில் 1 சதவீதத்தினர் அடிமட்டத்திலிருக்கும் 99 சதவீதத்தினரை விட அதிக செல்வவளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பார்கள் என்று கடந்த ஆண்டு ஆக்ஸ்ஃபோம் முன்கணித்தது. ஆனால், அந்த தொண்டு நிறுவனமே ஆச்சரியப்படும் வகையில், அது எதிர்பார்த்தை விட ஓராண்டுக்கு முன்னதாகவே இம்மாற்றம் நடந்திருந்தது.

மூடிய கதவுகளுக்குப் பின்னால், பிரத்தியேக கண்கவரும் ஆடம்பர இரவு விருந்தில், பில்லியனர்களும் பலகோடி மில்லியனர்களும் ஐயத்திற்கிடமின்றி அவர்களது தனிப்பட்ட செல்வச்செழிப்பினை பற்றி  ஓரளவிற்குத் திருப்திப்பட்டுக் கொள்வார்கள். ஆனால் அங்கே, டாவோஸில், ஓரளவிற்கு கவனமாக சிந்திக்ககூடியவர்கள் மத்தியில், எவரேனும் அவரது சொந்த பங்கின் அளவைக் குறித்து அதிக கவலையின்றி திருப்திப்பட்டுக் கொண்டால் அவர் ஒரு முட்டாள் என்பது உடனடியாக கூறப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கப்போவதில்லை. இந்த ஆண்டின் இந்த உலக பொருளாதார பேரவை, 2009 க்குப் பிந்தைய எந்தவொன்றையும் போலன்றி இதுவொரு நெருக்கடியின் நிழலில் நடக்கிறது என்பதுடன், இந்த உலக தலைவர்கள் கவலைப்படுவதற்கு அங்கே நிறையவே உள்ளன.

2014 இல் காகித மில்லியனர்களை உருவாக்குவதில் உலகிலேயே அந்நாட்டை முன்னணிக்கு கொண்டு சென்ற சீனப் பங்குச் சந்தை, இதில் சீன அரசாங்கத்தின் பாகத்திலிருந்தும் பாரிய முயற்சிகள் இருந்தன என்பதுடன், அது மீண்டுமொருமுறை பொறிந்து வருவதுடன், பங்குபத்திர வீழ்ச்சி போக்கிற்குள் (bear market) நுழைந்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையோ, வரலாற்றில் அதன் மிக மோசமான ஆண்டு தொடக்க செயல்பாட்டைக் காட்டிய பின்னர், ஒரு பின்னோக்கிய சரிவுக்குள் நுழைந்துள்ளது. பல பகுப்பாய்வாளர்கள் அங்கே 2008-2009 அளவுக்கு ஒட்டுமொத்த பதட்டம் இருக்காது போனாலும், சீனாவின் சந்தை வீழ்ச்சியை அதுவும் பின்தொடருமென முன்கணிக்கின்றனர்.

ஆனால் மிகச் சமீபத்திய விற்றுத்தள்ளல்களுக்குப் பின்னால் பல ஆழ்ந்த கவலைகள் உள்ளன. செலாவணி முறையை ஸ்திரமின்மைப்படுத்தி, மூலப்பொருட்களின் விற்றுத்தள்ளலை தொடங்கி வைத்து, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் கடனை குழப்பமானரீதியில் கட்டவிழ்த்துவிட்டு, உலக பொருளாதாரம் வளர்ச்சி குறைந்து வருகிறது. இதற்கிடையே மொத்தமாக அடியிலுள்ள பல்வேறு நீண்டகால போக்குகள், பகுப்பாய்வாளர்களை உலகளாவிய இலாபத்தன்மையில் மோசமான வீழ்ச்சியை முன்கணிக்க கொண்டு சென்றுள்ளது.

இதுவரை அமெரிக்காவிலும் மற்றும் ஐரோப்பாவிலும் வணிக-சார்பு தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டினுள் இருந்த தொழிலாள வர்க்கம் அல்லது அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் தனித்தனியாக பிளவுபட்டு இருந்த தொழிலாள வர்க்கம், அதிகரித்தளவில் கோபத்துடனும் அதிருப்தியுடனும் மட்டுமல்ல, மாறாக வேலைத்தல நடவடிக்கைகளை எடுக்கவும் சாய்ந்துள்ளது என்பதற்கான அறிகுறிகள் சம அளவில் நிதியியல் உயரடுக்கை தொந்தரவுக்கு உள்ளாக்குகின்றன.

கடந்த ஆண்டு சீனாவில் வேலைநிறுத்தங்கள் வெடித்தெழுந்தன, அமெரிக்காவில் அதிகரித்த எதிர்ப்பு இருந்தும் வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் (UAW) மூலமாக மட்டுமட்டான ஆபத்துடன் மூன்று மிகப்பெரிய வாகனத்துறை உற்பத்தியாளர்களுக்கு விட்டுக்கொடுப்பு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. டெட்ராய்டில், இதன் திவால்நிலை வழக்கு சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவிய ஆளும் வர்க்கத்தின் மிகப்பெரிய சூழ்ச்சிகளில் ஒன்றாக இருந்த நிலையில், அங்கே ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுக்கும் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர், அதேவேளையில் மிசிக்கன் ப்ளிண்ட் நகரில் தொழிலாள வர்க்க குடியிருப்புக்கள் நச்சுத்தன்மையானதாக மாறியிருப்பதற்கு எதிரான போராட்டங்கள் அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய தேசிய பிரச்சினையாக எழுந்துள்ளது.

உலகளாவிய நிதியியல் உயரடுக்கால் அவர்களது சொத்துக்களை பாதுகாத்துக்கொண்டு 2008 நெருக்கடியை சமாளித்துக் கொள்ள முடிந்தது மட்டுமல்லாது தமது சொத்துக்களை பன்மடங்காக்கியும் கொண்டது. ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, கிரீஸ் இல் தொடங்கி டெட்ராய்ட் வரையில், உலக மக்கள் மீது அதிகரித்த சிக்கன நடவடிக்கைகளை அவை திணித்திருந்தன மற்றும் மத்திய கிழக்கின் பெருந்திரளான மக்கள் மீது சர்வாதிகாரத்தை சுமத்தி இருந்தன. அதேநேரத்தில், அவை சாதனையளவில் பெரும் எண்ணிக்கையிலான ஒருங்கிணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள் மற்றும் பங்கு வாங்கிவிற்றல்கள் ஆகியவற்றினூடாக அவை அவற்றின் சொந்த செல்வவளத்தைப் பாரியளவில் அதிகரித்துக் கொண்டிருந்தன, இதற்கு உலகளாவிய மத்திய வங்கிகளிடமிருந்து இலவச பண உதவிகள் வழங்கப்பட்டன மற்றும் பாரிய வேலைநீக்கங்கள், கூலி வெட்டுக்கள் மற்றும் உற்பத்தி சக்திகளின் சீரழிவுகளும் அடித்தள ஆதாரமாக இருந்தன.

இப்போது நிதிய தன்னலக்குழு தங்கள் செல்வத்திற்கு முட்டுகொடுத்திருந்த ஒட்டுண்ணித்தன மாளிகை தள்ளாடி உடைந்துகொட்டுவதை பெரும் கவலையுடன் பார்க்கிறது. தொழிலாள வர்க்கத்தின் எந்த எதிர்ப்பையும் கண்டு ஆளும் வர்க்கம் அஞ்சுவது தான் உலகெங்கிலும் அது அதிகரித்தளவில் சர்வாதிகாரத்திற்கு திரும்புவதற்குப் பின்னால் இருப்பது. அவசரகால நெருக்கடிநிலையின் கீழ் நிறுத்தப்பட்டுள்ள பிரான்சில் ஒன்றுகூடுவதற்கான உரிமை மற்றும் பேச்சு சுதந்திரம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது; ஜேர்மனியில், ஒரு "பலமான அரசுக்கான" முறையீடுகளுக்கு இடையே ஜனநாயக உரிமைகள் மீதான அதிகரித்த தாக்குதல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன; அமெரிக்காவில், தனியார் நிறுவனங்கள் மறைகுறியீட்டு தகவல்தொடர்புகளை அணுக அரசாங்கத்தை அனுமதிக்க வேண்டுமென கோரப்படுவதும் அதில் உள்ளடங்கும்.

சர்வாதிகாரத்திற்கும் மேலதிகமாக, ஒவ்வொரு நாட்டிலும் பில்லியனர்கள் போரின் மூலமாக நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்குப் பாதையை பார்க்கிறார்கள். உள்நாட்டில் இலாபங்கள் போதுமான அளவிற்கு இல்லையென்றால், அங்கே அவர்களது உலகளாவிய போட்டியாளர்களை விலையாக கொடுத்து மூலப்பொருட்கள், சந்தைகள் மற்றும் உழைப்பை பாதுகாக்க இராணுவ சாகசத்தை நோக்கி தஞ்சம் அடைகின்றனர். அவ்விதத்தில், கடந்த உலகப் போரை அடுத்து இராணுவவாதத்தை கைவிட்ட தேசங்களும் கூட, ஜேர்மனி மற்றும் ஜப்பான், மீள்ஆயுதமேந்துவதுடன் படைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வருகின்றன, அவை உலகில் எட்டு மிகப்பெரிய இராணுவங்களை விட மிகப்பெரிய பிரமாண்டமான அமெரிக்க இராணுவ எந்திரத்துடன் போட்டிப்போட்டு மேலெழ முனைகின்றன.

டாவோஸில் கூடிய பில்லியனர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நோக்கம், உலக முதலாளித்துவத்தை பீடித்துள்ள ஆழமடைந்துவரும் நெருக்கடிக்கு ஒரு வர்க்க விடையிறுப்பை நெறிப்படுத்துவதாக இருக்கும், அதாவது 2008 க்குப் பின்னர் போலவே நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதாக இருக்கும்.

இந்த யதார்த்தமானது, உலகளாவிய நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீனமான மூலோபாய விடையிறுப்பை நெறிப்படுத்த, அதாவது சோசலிச அடிப்படையில் சமூகத்தை மறுஒழுங்கமைக்கும் நோக்கில் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச அரசியல் கட்சியைக் கட்டுமாறு, அதை இன்னும் அதிகமாக நிர்பந்திக்கிறது.